மலேசிய அரசாங்கம் அதன் கல்விக் கொள்கையில் சீர்திருத்தம் கொணர்வதற்காக கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள தனிநபர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்விமான்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் அரசாங்கம் அமைத்துள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றம் சந்திப்புகளை நாடு தழுவிய அளவில் நடத்தி வருகிறது. (காணொளி)
அச்சந்திப்புகளில் பங்கேற்று கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி மக்களும் அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளும் தங்களுடைய கருத்துகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும்.
இந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தின்படி தேசிய கல்வி அமைப்பின்கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீடுகளில் வேறுபாடு இருக்கக்கூடாது.
ஆனால், நடைமுறையில் பள்ளிகளுக்கிடையில் மிகுந்த வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. அவ்வாறான வேறுபாடுகளின் காரணமாக சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடும் வளர்ச்சியும் பெறுமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் அவலத்தை நாடே அறிந்துள்ளது.
இந்த அவலநிலையை சீர்திருத்துவதற்கு நமது கருத்துகளை தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவது அவசியமாகும்.
அந்நோக்கத்துடன் தமிழ் அறவாரியம் மலேசியா மிக அவசியமான முன்மொழிதல்களைத் தயாரித்துள்ளது. அவை:
1. தேசிய கல்வி அமைவுக்குட்பட்ட தேசியப்பள்ளி, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
2. தாய்மொழிப்பள்ளிக்கு அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடு ஏதும் இருக்கக்கூடாது.
3. தாய்மொழிப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் அனைத்தும் – கட்டடங்கள், வசதியான வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், திடல்கள், பயிற்சியும் தகுதியும் பெற்ற ஆசிரியர்கள், கல்வி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் – இனிமேலும் தாமதப்படுத்தாமல் வழங்கப்பட வேண்டும்.
4. அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர்பள்ளிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
5. தாய்மொழிப்பள்ளிகள் கட்டுவதற்கான நிலம் மற்றும் கட்டடம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து அவற்றுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6. மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விடும் போக்கிற்கான அடிப்படைக் காரணத்தைக் கலைவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
7. இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பிற்கு செல்வதற்கான மெட்ரிக்குலேசன் மற்றும் எஸ்டிபிம் சான்றுகள் சம்பந்தமான இடர்பாடுகள் அகற்றப்பட வேண்டும்.
8. தகுதி பெற்ற அனைத்து மாணவர்களும் எவ்வித வேறுபாடின்றி அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடமளிக்க வேண்டும். அவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதில் எவ்வித வேறுபாடும் இருக்கவே கூடாது. மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடம் ஒதுக்குவது, உபகாரச் சம்பளம் வழங்குவது குறித்த அனைத்தும் பகிரங்கமாக வெளிப்படையாகச் செய்யப்பட வேண்டும்.
9. பள்ளிகளில் போதிக்கப்படும் பாடங்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறணை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும் அவை மாணவர்களை சிறுமைபடுத்தும் நோக்கம் கொண்டதாகவோ எதனையும் மறைத்து இனவாதத்திற்கு வித்திடுவதாகவோ இருக்கக்கூடாது.
10. மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் திறமை ஒன்றின் அடிப்படையில் மட்டுமே அமையும், அவர்கள் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அல்ல, என்பதை மாணவர்களும் ஆசிரியர்களும் புரிந்து கொண்டு கல்வி போதிப்பதிலும் கற்பதிலும் ஈடுபாடு காட்டுவதற்கான அடித்தம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
11. தமிழ் இடைநிலைப்பள்ளிகள் தேவைப் பற்றிய விவாதம்.
12. தேசியப்பள்ளி இன்று ஓர் இனத்திற்கான, ஓரு சமயத்திற்கான பள்ளியாக மாறியிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் சுட்டிக் காட்டியிருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தேசியப்பள்ளியும் இதர தாய்மொழிப்பள்ளிகளும் பன்மொழி, பலபண்பாடுகள் மற்றும் பலசமயங்களும் கொண்ட ஒரு எதிர்கால நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளங்களாக்கப்பட வேண்டும்.
13. ஆரம்பத் தாய்மொழிப்பள்ளிகள் “தேசிய மாதிரி பள்ளிகள்” என்றுள்ளதை “தேசியப் பள்ளிகள்” என மாற்றப்படவேண்டும். இதன்வழி கல்வி சட்டம் 1996 இல் உள்ள தாய்மொழிப் பள்ளிகள் சார்புடைய 28 சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும்.
தமிழ் அறவாரியம் மலேசியா தயாரித்துள்ள மேற்கூறப்பட்ட முன்மொழிகள் மீதான கருத்தை சேகரிப்பதற்காக தமிழ் கல்வி, தமிழ்ப்பள்ளிகள் மீது ஈடுபாடு கொண்டுள்ள அமைப்புகளின் தலைவர்களோடு ஒரு சந்திப்பு நடத்தி அவர்களின் கருத்துகளைச் சேகரித்து அவற்றை தேசிய கல்வி ஆலோசனை மன்றத்திடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூரில் காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 வரையில் நடைபெறும்.
தமிழ் அறவாரியம் பட்டியலிட்டுள்ள முன்மொழிதல்கள் மீது கருத்துரைக்க விரும்பும் தமிழ் கல்வி, தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் ஈடுபாடுள்ள அமைப்புகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கப்படுகின்றனர். ஓர் அமைப்பிலிருந்து இருவர் மட்டுமே பங்கேற்கலாம்.
மேல்விபரங்களுக்கு தொடர்பு: 017-889 8843.
ஜி. வி. காத்தையா.
இயக்குனர், தமிழ் அறவாரிய ஆய்வியல் பிரிவு