முதலில் 60 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்தரவதைகளுக்கு இலக்கானதாக கூறப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதிகள், இசா ஆலோசனை வாரியத்திடம் புகார் செய்திருக்கக் கூடிய சாத்தியமே இல்லை. ஏனெனில் அந்த வாரியத்தின் விசாரணைகள் ‘ரகசியமாக’ நடைபெறுவது இல்லை.
அந்த விசாரணைகளில் வாரிய உறுப்பினர்களுடன் புலனாய்வு அதிகாரிகளும் சிறப்புப் போலீஸ் படைப் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர் என முன்னாள் இசா கைதியான் தியான் சுவா கூறினார்.
“அந்த அறையில் உள்ளவர்களை நம்ப முடியுமா முடியாத என்ற நிலையில் அந்தக் கைதிகள் உள்ளனர். காரணம் அந்த அறையில் இருப்பவர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை. அனைத்துலக மன்னிப்பு அமைப்பையோ, சுவாராமையோ சேர்ந்தவர்கள் அல்ல. அத்துடன் குடும்ப உறுப்பினர்களும் அல்ல.”
“அது மிகவும் அச்சமூட்டும் சூழ்நிலையாகும்,” பத்து எம்பி-யும் பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவா சொன்னார். அவர் 2001ம் ஆண்டு ரிபார்மசி போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக 2001ம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டார்.
இசா கைதிகள் சித்தரவதைகளுக்கு இலக்கானதாக கூறப்படுவதை மறுத்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்தரவதைக்கு இலக்கானதாக ஆலோசனை வாரியத்திடம் புகார் செய்யவில்லை என்று போலீஸ் கூறியுள்ளது பற்றியும் அவர் கருத்துரைத்தார்.
கைதிகளுக்கு ‘ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு’ ‘ஆலோசனை’ கூறப்படுவதாக தியான் சுவா சொன்னார்.
தாம் மருட்டப்பட்டதாக வழக்குரைஞர் சொல்கிறார்
கடந்த வாரம் நிகழ்ந்த வாரிய விசாரணையில் முஸ்தாவான் அஹ்பாப் என்ற கைதியைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் அபிக் எம் நூர், அந்த அறையில் போலீஸ் அதிகாரிகள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த வாரியத் தலைவரான பாடாரியா ஹசான், போலீஸ் அதிகாரிகள் அங்கு இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு தம்மை நேரடியாக எச்சரித்ததாக அபிக் சொன்னார்.
“நாங்கள் இசா-வுக்கு எதிராகப் பேசிய போது நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பது தமக்குத் தெரியும் என்றும் பல சிறப்புப் போலீஸ் பிரிவு அதிகாரிகள் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என்றும் பாடாரியா சொன்னார்,” என்றார் அபிக்.
சித்தரவதைகளை மறுத்துள்ள போலீசார் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளது பற்றி கருத்துரைத்த இன்னொரு வழக்குரைஞரான பாடியா நாட்வா பிக்ரி, அந்த ‘ஒப்புதல் வாக்குமூலங்களில்’ நெருக்குதல் காரணமாக கையெழுத்திடப்பட்டிருக்கலாம் என்றும் சொன்னார்.
அவர் பல முன்னாள் இசா கைதிகளை பிரதிநிதித்து வழக்காடியுள்ளார்.
தாங்கள் அந்த வாக்குமூலங்களைப் பார்க்கவில்லை என்றும் தாங்கள் “உதைக்கப்பட்ட பின்னர்” அவற்றில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது என்றும் தமது கட்சிக்காரர்கள் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கருத்தை ஏழு ஆண்டுகளுக்கு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் 2008ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட யாசிட் சுபாட் என்ற முன்னாள் கைதி ஒப்புக் கொண்டார்.
தமது ஒப்புதல் வாக்குமூலம் எனக் கூறப்படும் ஆவணத்தில் கையெழுத்திடத் தாம் மறுத்து விட்டதாக அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.
“நான் அதனை முதலாவது ஆலோசனை வாரியக் கூட்டத்தில் வாசித்தேன். நான் முதல் பக்கத்துடன் நிறுத்திக் கொண்டேன். அது மிக அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னர் நான் ஆலோசனை வாரியக் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளவில்லை,” என்றார் அவர்.
“ஒப்புதல் வாக்குமூலம் எனக் கூறப்படும் ஒன்றை வாசித்த போது தாம் மிகவும் அச்சமடைந்திருந்ததாக என்னுடன் தடுத்து வைக்கப்பட்ட என் நண்பர் ஒருவரும் கூறினார்.”
இசா கைதிகள் கொடூரமான சித்தரவதைகளுக்கு இலக்காவதாக கூறும் புதிய குற்றச்சாட்டுக்கள் கடைசித் தொகுதியைச் சேர்ந்த இசா கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கமுந்திங் முகாமிலிருந்து வெளியாகி உள்ளதாக மலேசியாகினி திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.
அந்தத் தகவலை மறுத்துள்ள போலீசார், காயங்கள் ஏற்பட்டதற்கான மருத்துவப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் சித்தரவதை குறித்த புகார்கள் ஏதும் ஆலோசனை வாரியத்திடம் கூறப்படவில்லை என்றும் கூறினார்கள்.
அந்தத் தகவல்கள் ‘ஆதாரமற்றவை’ ‘தீய நோக்கம் கொண்டவை’ என்றும் வருணித்த போலீசார், எல்லாக் கைதிகளும் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கான குற்றங்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலங்களை தந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.