உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாவது பற்றிய செய்திகள் புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கும் வேளையில் முன்னாள் கைதி ஒருவர், கைதிகள் எலும்புமுறிய தாக்கப்பட்ட சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.
2004-இல் நிகழ்ந்த அச்சம்பவத்தில் கைதிகளை எலும்புமுறியும் அளவுக்குத் தாக்கியவர்கள் ‘சித்திரவதைக் குறிப்புகள்’ கூறுவதுபோல் போலீஸ்காரர்கள் அல்லர்; கமுந்திங் தடுப்பு முகாமின் சிறைப் பாதுகாப்புப் பிரிவினர்(யுகேபி).
“சுமார் 100” யுகேபி-யினர் கைதிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் பலருக்கு எலும்புகள் முறிந்தன என்கிறார் ஏழாண்டுகள் அந்தத் தடுப்புமுகாமிலிருந்து விட்டு 2008-இல் அங்கிருந்து வெளியேறிய யாஸிட் சுபாட்.
அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மலேசியர்கள் ஒரு நாள் முழுக்கக் கடும் சித்திரவதையை அனுபவித்தார்கள்.ஆனால், வெளிநாட்டவர்தான் பாவம்.அவர்கள் மீது சித்திரவதை பல நாள் தொடர்ந்தது.
“ஒரு வாரம் தொடர்ந்தது என்று நினைக்கிறேன்.என் நண்பர்களுக்குக் கை எலும்புகள் விலா எலும்புகள் முறிந்தன.சிலரின் தலையில் ஆழமான வெட்டுக்காயங்கள்.தையல் போட வேண்டியதாயிற்று.
“அச்சம்பவத்துக்குப் பிறகு ஒரு மாதம் என் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தது.அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான் எங்களில் பலருக்கு மருத்துவ சிகிச்சையே கிடைத்தது”, என்று யாஸிட் கூறினார்.
ஜுமா இஸ்லாமியா, அல்-கைடா முதலியவற்றுடன் தொடர்புள்ளவர் என்று தடுத்து வைக்கப்பட்டிருந்த யாஸிட், கைதிகளின் கரங்களைப் பின்பக்கமாக வைத்து விலங்கிட்ட யுகேபி-இனர், பின்னர் அடிக்கவும் உதைக்கவும் முற்பட்டனர் என்றார்.
“சுவரைப் பார்த்தவாறு எங்களை நிறுத்தி வைத்து எங்கள்மீது எச்சில் துப்பினார்கள், சிறுநீர் கழித்தார்கள்.அவர்களில் எவரையாவது பார்த்தேன் என்றால் அவர்களின் தலையிலேயே மூத்திரம் அடிப்பேன்”, என்றவர் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கத்திகள், கத்திரிக்கோல்களால் மூண்ட தகராறு
கமுந்திங் தடுப்புமுகாமில் வன்செயல்கள் நடப்பது அரிதாகும் என்று கூறிய அவர்,யுகேபி ஒரு திடீர் சோதனை நடத்தி கைதிகள் வைத்திருந்த “பொருள்களை” அழிக்க முற்பட்டபோது குறிப்பிட்ட இந்த வன்செயல் நிகழ்ந்தது என்றார்.
“நாங்கள் ஒரு தொழில் செய்தோம்.மெல்லிழுப்புத் தாள்கள்(tissue paper) மற்றும் கடிதங்கள் வைப்பதற்கான காகிதப் பெட்டிகளைச் செய்து குடும்பத்தாரிடம் கொடுப்போம்.எங்கள்மீது அனுதாபம் கொண்டவர்கள் அவற்றை வாங்குவார்கள்.
“ஒரு நேரத்தில் மாதம் ரிம30,000 அதன்மூலமாக வருமானம் கிடைத்தது.அதை எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்.அதை வைத்து எங்கள் குடும்பத்துக்கும் உதவுவோம்”.அவர்கள்மீது அனுதாபம் கொண்ட தைப்பிங்கில் உள்ள ஒரு தங்குவிடுதி அவர்களின் தயாரிப்பை மொத்தமாக வாங்கிக் கொள்ளும்.
இந்தப் பொருள்களைச் செய்யக் கத்திகளும் கத்திரிக்கோல்களும் தேவை.இவை கிடைப்பதிலும் பிரச்னை இருக்கவில்லை அதாவது 2004 டிசம்பரில் யாசுஹிமி யூசுப் முகாமின் இயக்குனராக பொறுப்பேற்குவரை.
“அவற்றை வாங்குவதற்கு அவரிடம் அனுமதி கேட்டோம்.அவர் சரி என்றும் சொல்லவில்லை,முடியாது என்று மறுக்கவுமில்லை.அதனால், எங்களுடன் நன்கு பழகும் காவலர்களிடம் அவற்றை வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டோம்.
“அது அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டது.அவை பாதுகாப்புக்கு மிரட்டல் என்று சொல்லி உடனடி சோதனைக்கு உத்தரவிட்டார்கள்.
“நாங்கள் அவற்றை ஒளித்து வைத்தோம்.ஆனால், யுகேபி கண்டுபிடித்து விட்டார்கள்.அவற்றை அழிக்க முற்பட்டனர்.அதனால் சண்டை மூண்டது”, என்றார்.
அப்போது உள்துறை துணை அமைச்சராக இருந்த நோ ஒமார், சோதனை நடவடிக்கையைக் கைதிகள் எதிர்த்ததாகவும் காவலர்கள்மீது கல்லெறிந்து “கலகம்” செய்ததாகவும் அதன் விளைவாக எண்மர் காயமடைந்தனர் என்றும் கூறினார்.
தையல்கள், முறிந்த எலும்புகள்
யாஸிட் தெரிவித்த செய்திகள் உண்மைதான் என்பதை 2005ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
கைதிகளின் கை கால் எலும்பு முறிந்தது பற்றியும், விலா எலும்புகள் நொறுங்கியது பற்றியும் தலையில் காயம்பட்டு சிலருக்கு இருபது தையல்கள்வரை போடப்பட்டது பற்றியும், கண்களில் காயம்பட்டு இரத்தம் கொட்டியது பற்றியும் அவ்வறிக்கை விவரித்தது.
அச்சம்பவம் பற்றி விவரித்த கைதிகள், தாங்கள் ஓங்கிக் குத்தப்பட்டதாகவும் குறுந்தடிகளால் அடிக்கப்பட்டதாகவும், தங்கள்மீது காறித் துப்பினார்கள் என்றும் வாய்க்கு வந்தபடி ஏசினார்கள் என்றும் கூறியுள்ளனர். கைதிகளின் ஆடைகளைக் களைந்துவிட்டு அவர்கள் சிறைவைக்கப்பட்ட அறைகள் வரை நிர்வாணமாக தவழ்ந்து போகச் சொன்னார்களாம். அச்சம்பவத்துக்குப் பின்னர் சிலர், யாஸிட் போன்றோர், தனித்து வைக்கப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பில் கைதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் மொத்தம் 70 போலீஸ் புகார்களைச் செய்தனர். போலீஸ் விசாரணை செய்து விசாரணை ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டன.ஆனால், யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
முகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட ‘சித்திரவதைக் குறிப்புகள்’ பற்றிக் கேட்டதற்கு அதில் விவரிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே நம்புவதாக அவர் சொன்னார்.
விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த காலத்தில் தாம் சித்திரவதை செய்யப்படுவதினின்றும் தப்பியதாகக் கூறிய யாஸிட், மற்ற கைதிகளின் உடலில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்களைக் கண்டதாகக் கூறினார்.
“சிலர், ஐஸ் கட்டியின்மீது வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.மற்றவர்கள் தலைகீழாக தொங்க விடப்பட்டுள்ளனர்.
“ஆனால், குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள சுழலும் இயந்திரங்கள் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.ஒருவேளை எனக்குப் பிறகு வந்தவையாக இருக்கலாம்”, என்றார்.
சித்திரவதை பற்றிக் கூறப்படுவதை “ஆதாரமற்றது” “தீய நோக்கம் கொண்டது” என்று சொல்லி போலீஸ் நிராகரித்து விட்டது.