இயல்பான வாக்காளர் பதிவு முறை அமலாக்கப்பட வேண்டும் என கைரி விரும்புகிறார்

21 வயதை அடையும் மலேசியர்களை இயல்பாகவே வாக்காளர்களாகப் பதிவு செய்யும் முறை அமலாக்கப்பட வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் விரும்புகிறார்.

அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் பல இயக்கங்களை மேற்கொண்ட போதிலும் பெரும் எண்ணிக்கையிலான மலேசியர்கள் தங்களுக்கு 21 வயது வந்ததும் வாக்காளர்களாக பதிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதால் இயல்பான பதிவு முறை அவசியம் என அவர் சொன்னார்.

“நாம் யாரையும் பதிவு செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்பதால் இயல்பான வாக்காளர் பதிவு முறையின் கீழ் அந்தப் பிரச்னையைத் தீர்த்து விடலாம்,” என்றார் அவர்.

கைரி இன்று புத்ராஜெயாவில் “உரிமைகளும் பாதுகாப்பும்: சம நிலையை ஏற்படுத்துவது” என்னும் தலைப்பைக் கொண்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

இன்னும் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளாத, தகுதி பெற்ற 3 மில்லியன் மக்கள் ஜுன் 30க்குள் பதிவு செய்து கொண்டால் ஆகஸ்ட்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற்றால் அதில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அறிவித்துள்ளது பற்றி ரெம்பாவ் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி கருத்துரைத்தார்.

பெர்னாமா