ஃபாய்கா சர்ச்சை: சமரச முயற்சியில் மூவர்

சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஃபாய்கா ஹுசேனுக்கு எதிரான இயக்கம்  இணையத்தில் சூடுபிடித்துள்ள வேளையில் அச்சச்சரவில் தலையிட்டு சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் என்ஜிஓ தலைவர்கள் மூவர் இறங்கியுள்ளனர்.

மக்கள் முற்போக்கு மற்றும் நலவளர்ச்சி சங்க(புரோ-ரக்யாட்)த்தைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட அம்மூவரும் அந்த இயக்கத்தால் ஃபாய்காவின் எஜமானர், மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பெயர் கெடுவதாகக் கூறினார்கள்.

ஃபாய்கா,அவர் செய்யும் வேலைக்கு “மிகவும் தகுதி பெற்றவர்” என்றும் கடமையுணர்வுடன் பணியாற்றுக்கிறார் என்றும் புரோ ரக்யாட் தலைமைச் செயலாளர் முகம்மட் நகுய்ப் கர்மெய்ல் ரொசாலி கூறினார். 

அவர் “கண்டிப்பானவர்” என்றும் அவர்கள் வருணித்தனர்.அதனால்தான் மந்திரி புசார் அலுவலகம் சென்று காரியம் சாதித்துக்கொள்ள நினைப்பவர்கள் அவரை ஒரு தடங்கலாக நினைக்கிறார்கள் போலும்.

பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கி வருவதால் இந்த நேரத்தில் உள்சண்டை நல்லதல்ல என்றும் முகம்மட் நகுய்ப் செய்தியாளர் கூட்டமொன்றில் குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் புரோ-ரக்யாட் தகவல் தலைவர் அஹ்மட் தார்மிஸி சுலைமான், புரோ-ரக்யாட் செயலவை உறுப்பினர் அப்துல் ஹாலிம் அப்துல்லா ஆகியோரும் இருந்தனர்.

மூவரும் தங்களின் என்ஜிஓ சார்பில் பேசவில்லை என்றும் “அக்கறை கொண்ட குடிமக்கள்” என்ற முறையிலேயே பேசுவதாகவும் விளக்கினர்.

மூவரும் அஸ்மினுடன் தொடர்புள்ளவர்களா?

மூவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் யாக்கூப் சபரியுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்கள் என்பதையும் அவர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு நெருக்கமானவர் என்பதையும் மலேசியாகினி அறியவருகிறது.

ஆனால்,அம்மூவரும்  அஸ்மினின்(வலம்) அரசியல் ‘முகாமை”ச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதை மறுக்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் அவர்கள் உண்மையிலேயே சமரச முயற்சியைத்தான் மேற்கொண்டிருக்கிறார்களா அல்லது விளம்பரம் தேடும் பேர்வழிகளா என்பதை முடிவுசெய்வது கடினமாகவுள்ளது.

இணையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் ‘Kami Sayangkan PKR’ (நாங்கள் பிகேஆரை விரும்புகிறோம்) என்னும் இயக்கமொன்று மந்திரி புசாரின் அரசியல் செயலாளரைப் பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வருகிறது.Geran Selangorku என்னும் சிலாங்கூர் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிதி பகிர்ந்தளிப்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திதான் இந்தச் சச்சரவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.