தாஜுடின் விவகாரம்: நஸ்ரி யோசனை மீது ஜிஎல்சி-க்கள் மௌனம்

முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்கு- வழக்கு நிர்வாகத்துக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் சமர்பிக்க வேண்டும். ஆனால்  தங்களைப் பிரதிநிதிப்பதற்கு ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சர்ர்சைக்குரிய அம்னோ நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்த ‘யோசனை’ மீது அவை இன்னும் மௌனம் காக்கின்றன.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது எந்த ஜிஎல்சி-யும் அவ்வாறு செய்யவில்லை என ஹபாரிஷாம் வான் &ஆயிஷா முபாரக் சட்ட நிறுவனத்தின்  முகமட் ஹபாரிஷாம் ஹருண் கூறினார்.

“உண்மையாகச் சொன்னால் எந்த ஜிஎல்சி-யும் எனது நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக இன்னும் நியமிக்கவில்லை. அவர்கள் என்னை நியமிப்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார் அவர்.

புதிதாக நியமிக்கப்பட்ட முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் ராவ்ஸ் ஷரிப் முன்னிலையில் அந்த வழக்கு- வழக்கு நிர்வாகத்துக்குக் செப்டம்பர் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதனிடையே எம்ஏஎஸ் தன்னுடைய தற்போதைய வழக்குரைஞரான ரோஸ்லி டாஹ்லானை “நீக்கி விட்டு”    தன்னைப் பிரதிநிதிப்பதற்கு ஹபாரிஷாமை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ராஜா பெத்ரா கமாருதினுடைய மலேசியா டுடே வலைப்பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எம்ஏஎஸ்-ஸின் பேரங்கள் குறித்து ரோஸ்லிக்கு மிக அதிகமாகத் தெரிந்திருப்பதால் அவர் ஒதுக்கப்படுவதாக அந்த அரசியல் வலைப்பதிவு குறிப்பிட்டது.

தாஜுடின் மீது வழக்குப் போட்டுள்ள அனைத்து ஜிஎல்சி-க்களும் நீண்ட காலமாகத் தொடரும் தகராற்றை முடிவுக்குக் கொண்டு வர ஹபாரிஷாம் நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ஜிஎல்சி-க்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் துறை அமைச்சருமான நஸ்ரி குறிப்படிருந்தார்.

தமது கடிதம் வெறும் ஆலோசனையே என்றும் உத்தரவு அல்ல என்றும் நஸ்ரி பின்னர் மலேசியாகினியிடம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தாஜுடினான நீண்ட காலத் தகராற்றுக்கு ‘உலகளாவிய தீர்வு’ மீது தங்களுக்கு தாஜுடினிடமிருந்து எந்த யோசனையும் கிடைக்கவில்லை என ஆகஸ்ட் மாதம் சம்பந்தப்பட்ட ஜிஎல்சி-க்கள் புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன. எம்ஏஎஸ், செல்கோம், அக்ஸியாத்தா குழுமம் ஆகியவை அந்த ஜிஎல்சி-க்களில் அடங்கும்.

வழக்குத் தொடர்ந்துள்ள பல்வேறு தரப்புக்களுக்கு 589 மில்லியன் ரிங்கிட்டைக் கொடுக்குமாறு நீதிமன்றம் தாஜுடினுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தாஜுடினும் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கக 13 பில்லியன் ரிங்கிட் கோரி எதிர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.