இசாவுக்கு மாற்றுச் சட்டங்கள் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும்

தடுப்புக் காவலை அனுமதிக்கும் இசா சட்டத்திற்கு மாற்றாக அமையும் புதிய சட்டங்களை அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். அவற்றின் விவரங்களைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதே அதற்குக் காரணம்.

அந்த சட்டங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் பொது ஒழுங்குச் சட்டமும் அடங்கும் என சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சருமான நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறினார்.

ஜனநாயக உரிமைகளுக்கு பெரிய தடைக்கல் எனக் கருதப்பட்ட, கால வரம்பின்றி விசாரிக்கப்படாமல் ஒருவர் தடுத்து வைக்கப்படுவதற்கு அனுமதிக்கும் 51 ஆண்டு கால உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமது அரசாங்கம் ரத்துச் செய்யும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்தார்.

அந்த நடவைக்கையை அரசாங்க எதிர்ப்பாளர்களும் சமூக உரிமைப் போராளிகளும் வரவேற்றுள்ளனர். ஆனால் புதிய சட்டங்கள் பற்றி மேலும் விவரங்கள் தேவை என அவர்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் அரசாங்கம் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அக்டோபர் மாதம் கூடும் நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்குப் போதுமான அவகாசம் இல்லை என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் சட்ட முன் வரைவுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் நஸ்ரி சொன்னார்.

“நாங்கள் அக்டோபரில் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது. ஏனெனில் பல்வேறு சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் யார் தொடர்ந்து காவலில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

“ஆகவே தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் சட்டங்களை ரத்துச் செய்ய முடியாது.”

“அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிற பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப் போன்று புதிய சட்டங்கள் இருக்கும்.”

பழைய நடைமுறைகளைக் கொண்ட புதிய பொட்டலம் அல்ல

இதனிடையே தடுப்புக் காவல் அதிகாரங்கள் தொடர்ந்து போலீசாரிடம் இருக்கும் என நஜிப் அறிவித்துள்ளது குறித்து நடப்புச் சட்டங்களை எதிர்ப்பவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். முன்னைக் காட்டிலும் குறைவான காலத்துக்கே தடுத்து வைக்க முடியும் என்றும் அதனை நீட்டிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு வேண்டும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே நீதிமன்ற அனுமதி தேவை இல்லை.

புதிய சட்டங்கள், பழைய நடைமுறைகளை புதிய பொட்டலத்தில் கட்டியதைப் போன்று இருக்கும் எனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதை நஸ்ரி நிராகரித்தார்.

“நஜிப் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்வது என துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். ஆகவே எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற அறிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.”

2009ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட போது நஜிப், இசா சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதாக வாக்குறுதி அளித்தார். அண்மைய ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளின் வலிமை அதிகரித்து வரும் வேளையில் 2013ம் ஆண்டுக்குள் நிகழ வேண்டிய புதிய தேர்தலில் தனது வாய்ப்புக்களுக்கு வலிமையூட்டும் பொருட்டு நஜிப் அந்த அறிவிப்பைச் செய்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

ஏஎப்பி