எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு மொத்தம் 3 பில்லியன் ரிங்கிட் உள்ள 20 கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என சொல்லப்படுகின்ற மாது ஒருவருடைய முகம் அம்பலமாகியுள்ளதாக மிங்குவான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஏடு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பாகும். பல வாரங்களுக்கு முன்பு அம்னோ உறுப்பினரான உம்மி ஹபில்டா எம்ஏசிசி அதிகாரி ஒருவரிடம் ஆதாரங்களைச் சமர்பித்ததாக கூறப்பட்ட பின்னர் வலைப்பதிவாளரான Dr MiM-டம் அந்த படத்தின் அசல் இருப்பதாக அந்த ஏடு தெரிவித்தது.
அன்வார் அந்த மாது-டன் மிக நெருக்கமாக இருந்தார் என்றும் அந்த மாது வருமான வரியாக 50 மில்லியன் ரிங்கிட் செஉத்தினர் என்றும் உம்மி கூறிக் கொண்டதாக அந்த ஏடு கூறியது.
பெயர் தெரிவிக்கப்படாத அந்த மாதுக்கு கிட்டத்தட்ட 62 ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளும் பங்களாக்களும் சொந்தமாக அல்லது தொடர்புடையதாக பெரும்பாலும் பினாங்கில் இருந்தன என்றும் உம்மி சொன்னதாகவும் கூறப்பட்டது.
உம்மி எம்ஏசிசி அதிகாரிகளைச் சந்தித்து ஆதாரங்களை கொடுத்துள்ளதாக வெள்ளிக் கிழமை நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
“அந்த ஆதாரங்களில் சொத்துக்கள் பட்டியலும் அன்வார் மூலம் நன்மை அடைந்ததாக கூறப்படும் மாது ஒருவருடைய படமும் அடங்கும்.”
ரிபார்மசி இயக்கம் உச்சக் கட்டத்தில் இருந்த போது அப்போதைய பாங்க் நெகாரா துணை கவர்னர் அப்துல் முராட் காலித், துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அன்வாரிடம் சொத்துக்களாகவும் பங்குகளாகவும் ரொக்கமாகவும் மொத்தம் மூன்று பில்லியன் ரிங்கிட் உள்ள 20 கணக்குகள் இருந்ததாக கூறிக் கொண்டார்.