உங்கள் கருத்து: அறிகுறிகளை நோயுடன் இணைத்து குழப்பக் கூடாது

“தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய சமுதாயத்தை பிரித்து விட்டன எனக் கூறுவது கல்வி முறையில் உள்ள ஏற்றத்தாழ்வை மறைப்பதற்கு ஒப்பாகும்”

டாக்டர் மகாதீரின் மோசமான மருந்து

அடையாளம் இல்லாதவன்_3f4a: கல்வி முறையில் காணப்படுகின்ற பல்வகைத்தன்மை வலிமையாகும். அது பலவீனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அரசாங்கத்தின் பாகுபாடான கொள்கைகளே நாட்டை பிளவுபடுத்தி விட்டன. சமுதாயத்தில் ஐக்கியத்தை சீர்குலைத்து விட்டன.

மலேசிய சமுதாயம் பிளவுபட்டுள்ளதற்கு சிறுபான்மை மக்களுடைய தாய்மொழிப் பள்ளிகள் மீது பழி போடுவது கல்வி முறையில் உள்ள ஏற்றத்தாழ்வை மறைப்பதற்கு ஒப்பாகும்.

ஸ்விபெண்டர்: அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நம்மை ஒன்றுபடுத்துவதற்கு நமது மூளையையும் அறிவாற்றலையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நமது வேறுபாடுகளை பயன்படுத்தி அவற்றைப் பெரிதாக்கி விட்டார். அதனால் நாம் நமது இன வம்சாவளி, சமயப் பின்னணிகளுக்கு ஏற்ப நேர்கோடுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒன்றுபடுத்துவதைக் காட்டிலும் பிளவுபடுத்துவது எளிது. துரதிர்ஷ்டவசமாக மகாதீர் முன்னதைத் தேர்வு செய்து அதில் நிபுணத்துவமும் பெற்று விட்டார். அவர் நாட்டை ஐக்கியப்படுத்துவது பற்றி நிறையப் பேசுவார். ஆனால் நடைமுறையில், அமலாக்கத்தில் அவரது கொள்கைகள் பாகுபாடானவை. பிளவுபடுத்தக் கூடியவை. சுயநலனை அடிப்படையாகக் கொண்டவை.

இன்றும் கூட அவர் அதே மாதிரித் தான் பேசுகிறார்; இரட்டை நாக்கு. ஆபத்தானது, கள்ளத்தனமானது.

மகாதீருக்கு முந்திய காலத்தை நாம் நினைவுக்கு கொண்டு வருவோம். கல்வி, சமயம், இனம் ஆகியவை நம்மை பிளவுபடுத்தும் விஷயங்களாக இருந்தது இல்லை.

நமது வேறுபாடுகளை அரசியல்வாதிகள் பயன்படுத்தி பெரிதாக்கமல் இருந்ததால் நாம் சக வாழ்வில் இணைந்திருந்தோம்.

நமது பல்வகைத்தன்மை நமக்கு சாபக்கேடாகவும் வலிமையாகவும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக முன்னதற்கு ஊக்கமூட்டப்பட்டது. அதனால் பின்னது நலிவடைந்து விட்டது. மகாதீர் நாட்டு நிர்மாணிப்பாளர் என்ற முறையில் படுதோல்வி அடைந்து விட்டார்.

உங்கள் அடிச்சுவட்டில்: மகாதீர் விரித்த வலையில் பலர் விருப்பப்பட்டு சிக்கிக் கொண்டனர் என்பது உண்மையாக இருக்கலாம்.

உங்கள் விவேகத்தைப் பயன்படுத்துங்கள். நாம் விலங்குகளைப் பிடிக்க வலை விரிக்கிறோம். அவை விருப்பப்பட்டு அதற்குள் மாட்டிக் கொள்கின்றனவா ? சில வேளைகளில் அறியாமை. சில வேளைகளில் விரக்தி. உங்களுக்குப் புரிகிறதா ?

தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஐக்கியத்துக்கு நல்லதல்ல என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பல வகையான பாகுபாடுகளைக் காட்டும் நடவடிக்கைகள்/கொள்கைகள்/அமைப்புக்கள் இருக்கும் போது தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை நீக்கி விட்டால் மாற்றம் ஏற்பட்டு விடுமா ?

தேசியப் பள்ளிகளில் இனவெறியையும் இனவாதத்தையும் ஒழிப்பதற்குப் போராடுவது தான் நியாயமான வழியாக இருக்கும்.

வேட்டைக்காரன்: சமய, இன பாகுபாடு இல்லாத வகையில் தேசியப் பள்ளிக்கூடங்கள் பல இனப் பள்ளிகளைப் போல இயங்கியிருந்தால் தாய்மொழிப் பள்ளிகள் வெகு காலத்துக்கு முன்பே இயற்கையான மரணத்தை அடைந்திருக்கும்.

சமய ரீதியில் பாகுபாடு காட்டுகின்ற ஆசிரியர்கள் போதனைகளை திணிக்கக் கூடும் என அஞ்சியே பல பெற்றோர்கள் அங்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப அஞ்சுகின்றனர்.

இன்னொரு அம்சம், தேசியப் பள்ளிகளில் கற்பிக்கும் தரமும் கட்டொழுங்கும் சீர்குலைந்து விட்டதாகும்.

இனப் பாகுபாடுகளையும் சமயப் பிரச்னைகளையும் வலியுறுத்தும் பாடத் திட்டம் பெற்றோர்களை அங்கிருந்து ஒதுங்கச் செய்து விடுகிறது.

மலாய்க்காரர்களுக்கு அடிபணியா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீனர்களிடம் சொல்கின்ற ஆசிரியர்களும் கிளிங் என இந்தியர்களையும் அழைக்கும் ஆசிரியர்களும் இருக்கும் போது நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும் ?

நாட்டை சூழ்ந்துள்ள பல பிணிகளைப் போன்று நமது கல்வி முறையின் நடப்புச் சீரழிவுக்கும் பிஎன்-னே பொறுப்பேற்க வேண்டும்.

ரெத்னம்: சிங்கப்பூரில் தாய்மொழிப் பள்ளிகள் இல்லை. அதனால் சிங்கப்பூரில் இனப் பிரிவுகள் இல்லை என்று அர்த்தமா ?