பள்ளிவாசல் ஒலிபெருக்கி மீது பினாங்கு விதித்துள்ள தடையை பெர்லிஸ் ஆதரிக்கிறது

வைகறையின் போது பள்ளிவாசல் அல்லது சூராவ் ஒலிபெருக்கிகள் மூலம் திருக்குர் ஆன் போதனைகளை ஒலிபரப்பும் நடைமுறை முகமது நபியின் போதனைகளுக்கு முரணானவை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார்.

“வைகறைக்கு முன்னதாக ஒலிபெருக்கியின் அளவைக் கூட்டுவது முகமது நபியின் போதனைகளுக்கு எதிரானது. ஏனெனில் அது இன்னும் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறது.”

“அத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அது ஒரு பாவமாகும்,” என அந்த முப்தி மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“வைகறையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்குத் தடை” என்னும் தலைப்பில் பெரித்தா ஹரியான் வெளியிட்டுள்ள செய்தி பற்றி ஜுவாண்டா கருத்துரைத்தார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சூராவ்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அந்த மாநில இஸ்லாமிய விவகார மன்றம், வைகறைக்கு முன்னதாக ஒலிபெருக்கியின் அளவைக் கூட்டுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

வைகறை நேரத்தில் திருக்குர் ஆன் போதனைகளை ஒலிபரப்புவதை தடுக்கும் பினாங்கு பாத்வா மன்ற உத்தரவை தாம் ஆதரிப்பதாக பெர்லிஸ் முப்தி சொன்னார்.

“நாங்கள் அந்த உத்தரவை ஆதரிக்கிறோம். பெர்லிஸ் வெகு காலத்திற்கு முன்பே எங்கள் பள்ளிவாசல்களிலும் சூராவ்களிலும் அந்தத் தடையை அமலாக்கியுள்ளது”, என ஜுவாண்டா சொன்னார்.

பெர்லிஸ் துவாங்கு ராஜா மூடா தலைமையிலான பெர்லிஸ் பாத்வா மன்ரம் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி அந்த விஷயம் பற்றி முடிவு செய்தது என்றார் அவர்.

‘பிரதமர் அலுவகம் அந்த முடிவை மதிக்கிறது’

இதனிடையே அந்த விவகாரம் பற்றிக் கருத்துரைத்த பிரதமர் அலுவலக அமைச்சர் ஜமில் கிர் பாஹ்ரோம், பினாங்கு அதிகாரிகளின் முடிவை தாம் மதிப்பதாக கூறியிருக்கிறார்.

“அந்த முடிவு ஏப்ரல் 7ம் தேதி மாநில பாத்வா குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தடை குறித்த சுற்றறிக்கை ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்டது”, என அவர் கோலாலம்பூரில் கூறினார்.