ரத்துச் செய்யப்பட்டு விட்ட இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்தரவதை செய்யப்படுவதாக சொல்லப்படுவது மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சமர்பிக்கப்பட்ட ஒரு பிரேரணையை மக்களவைத் தலைவர் பண்டிக்கார் அமின் முலியா இன்று நிராகரித்துள்ளார்.
“அந்தக் கைதிகளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் பேட்டி கண்டுள்ளது. அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என பண்டிக்கார் வாதாடினார்.
தற்போது மற்ற பல கைதிகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈராக்கிய பிரஜை சாம்மி அகமட் பற்றிக் குறிப்பிட்ட பண்டிக்கார், அவரது விவகாரம் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதனை விவாதிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றார்.
“அவரது விஷயத்தில் தேசியப் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டுள்ளது. அதில் ரகசியத் தன்மையும் உள்ளது. ஆகவே அதனை விவாதிப்பதற்கு நான் அனுமதிப்பது பொருத்தமானதாக இருக்காது.”
இசா கைதிகள் சித்தரவதை செய்யப்படுவதாக கூறப்படுவது மீது மலேசியாகினியில் வெளியான செய்திகளையும் சுஹாக்காம் வெளியிட்ட அறிக்கைகளையும் குறிப்பிட்டு பாக்ரி எம்பி எர் தெக் ஹுவா, அந்தப் பிரேரணையை நேற்று சமர்பித்தார்.
கமுந்திங் தடுப்பு முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படும் சித்தரவதைச் சம்பவங்களை வருணிக்கும் குறிப்புக்கள் பத்திரிக்கைகளுக்கும் இதர தரப்புக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்ட பின்னர் அந்தச் செய்திகள் வெளியாகின.