வெளிப்படையான போக்கை பின்பற்றுமாறு இசி-க்கு வட்டார தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவுரை

தேர்தல் பார்வையாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுமாறு மலேசியத் தேர்தல் ஆணையத்தை (இசி) வட்டார தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று அறிவுரை கூறியுள்ளது.

தான் பாரபட்சம் காட்டவில்லை என்பதை இசி மெய்பிப்பது முக்கியம் என சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு (Anfrel) தெரிவித்துள்ளது.

“குறிப்பிட்ட ஒர் அமைப்புக்கு இசி அங்கீகாரம் கொடுக்கா விட்டால் அதற்கு பொருத்தமான காரணத்தை அது காட்ட வேண்டும். தனது முடிவுக்கு விளக்கம் தருவதோடு ஆதாரத்தையும் வெளியிட வேண்டும்,” என பாங்காக்கில் இயங்கும் அந்த அமைப்பு கூறியது.

“நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு முறையீடு செய்து கொள்ளும் உரிமை கொடுக்கப்பட வேண்டும். இசி தன்மூப்பாக நடந்து கொள்கிறது. பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை இசி தவிர்க்க அது உதவும்.”

13வது பொதுத் தேர்தலில் தீவகற்ப மலேசியாவுக்கான பார்வையாளர்களாக பணியாற்றுவதற்கு ஐந்து அமைப்புக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இசி கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

தேர்தல் கண்காணிப்பு அந்த ஐந்து அமைப்புக்களின் முக்கிய நடவடிக்கை அல்ல என்பது குறிப்ப்டத்தக்கது.

சபா சரவாக்கில் பார்வையாளர்களாக மூன்று அமைப்புக்களுக்கும் இசி அங்கீகாரம் அளித்துள்ளது.  அவற்றுக்கும் தேர்தல் கண்காணிப்பில் போதுமான அனுபவம் இல்லை.

அந்த நியமனங்கள் தன்மூப்பானவை என்று தீவகற்ப மலேசியாவில் இயங்கும் சில அரசு சாரா அமைப்புக்கள் கூறியுள்ளன.

கண்காணிப்பு பணியை முறையாக செய்வதற்கு பொருத்தமான சட்ட வடிவமைப்பு இல்லாததால் தேர்தல் பார்வையாளராக பணியாற்றுமாறு இசி விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டதாக ஜனநாயகம், தேர்தல் நேர்மை ஆகியவற்றுக்கான தேசியக் கழகம் அறிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள “அனுபவம் வாய்ந்த, தொழில் நிபுணத்துவம் கொண்ட தேர்தல் பார்வையாளர் குழுக்களுக்கு” இசி அங்கீகாரம் அளிப்பதோடு அனைத்துலக பார்வையாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் Anfrel கேட்டுக் கொண்டது.