கேலிச்சித்திர கலைஞர் ஸுனார்: நஜிப், விருதும் பணமும் வேண்டாம்; உரிமை வேண்டும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பசார் செனியில் நடந்த ஒரே மலேசியா கேலிச்சித்திரம் மற்றும் சித்திர இயக்கம் கண்காட்சியில் பிரதமர் நஜிப் தமக்கு அளிக்கவிருந்த விருதை தாம் உதறித்தள்ளி விட்டதாக அரசியல் கேலிச்சித்திர கலைஞர் ஸுனார் கூறினார்.

“எனக்கு விருதோ பணமோ வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது எனது உரிமைகள். எனது உரிமையை என்னிடம் திருப்பித் தாருங்கள்”, என்று ஸுல்கிப்லி அன்வார் அல்ஹாஹ் என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த கேலிச்சித்திர கலைஞர் மலேசியாகினியிடம் கூறினார்.

“நஜிப்தான் அந்த விருதை அளிக்கவிருந்தவர். அந்த மனிதரின் நிருவாகத்தில்தான் நான் கைது செய்யப்பட்டேன், எனது புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது, போலீசார் எனது அலுவலகத்தின்மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர், எனது புத்தகத்தை அச்சடித்து வெளியிடுவதற்கு எனது வெளியீட்டாளர், அச்சகக்கூடத்தினர் மற்றும் பதிப்பகத்தினர் மீது கட்டுப்பாடுகளை விதித்தனர்.

“எனது உரிமையைத் திருப்பித் தாருங்கள், எனது புத்தகங்களை வெளியிடுவதற்கு அனுமதியுங்கள், எனக்கு எதிரான கட்டுப்பாடுகளை அகற்றுங்கள். அதன் பிறகு நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து நான் சிந்திக்கக்கூடும்.”

கேலிச்சித்திர கலைஞர்களை அரசாங்கத்தின் பக்கம் திருப்புவதற்கு நஜிப் மேற்கொண்டுள்ள முயற்சி இது என்று கருதும் ஸுனார் அம்முயற்சியைக் கண்டித்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் CAWவும் (Cartoonist At Work) புத்ரா அம்னோவும் எப்படி தம்மை அணுகி கேலிச்சித்திர கலைஞர் சாதணை விருது பெறுவோர்களில் ஒருவராக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர் என்பதை அவர் விவரித்தார்.

“அதனை நான் உதறித் தள்ளினேன் ஏனென்றால் அது என்னை வாங்கி மௌனியாக்குவதற்கான முயற்சி என்று நான் எண்ணுகிறேன்”, என்று கூறிய ஸுனார், CAWவின் புரவலர் ஷொகைமி ஷஹடான்   உண்மையில் ஒரு புத்ரா அம்னோ செயற்குழு உறுப்பினராவார் என்றாரவர்.

Caw சமீபத்தில் தகவல், தொடர்பு மற்றும் பண்பாட்டு அமைச்சிடமிருந்து ரிம5 மில்லியன் மான்யம் பெற்றுள்ளது.