யாருக்கு நாட்டுப்பற்றில்லை:கபேனா மீது மசீச பாய்ச்சல்

மெண்டரின் மொழியில் கூட்டம் நடத்தியதை நாட்டுப்பற்ற செயல் என்று கூறிய தேசிய எழுத்தாளர் சங்க(கபேனா)த்தைச் சாடிய மசீச, அரசமைப்பு அதற்கு இடமளிப்பதைச் சுட்டிக்காட்டியது.

“அரசமைப்பு பகுதி 152, ‘மலாய் மொழியே தேசிய மொழி, என்றாலும் கூட்டரசில் உள்ள மற்ற சமூகங்களின் மொழிகளைப் பயன்படுத்தவும் படிக்கவும் அனுமதி உண்டு’ என்கிறது.

“அந்த வகையில், மசீசவுக்கோ  மற்ற அமைப்புகளுக்கோ அவற்றின் பதாகைகளில் எந்த மொழியைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்யும் உரிமை உண்டு”, என்று மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் ஹெங் சீய் கை இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் குறைகூறுபவர், பாஸ் அதன் பதாகைகளில் ஜாவி எழுத்துகளைப் பயன்படுத்துவதைக் குறை சொல்வதில்லை.அந்த வகையில் கபேனா தலைவர் அப்துல் லத்திப் அபு பக்கார் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிக்கிறார் என்றவர் சாடினார்.

“இது, அப்துல் லத்திப் அரசையலமைப்பை மதிக்கவில்லை என்பதையும் அவர் சமூகத்தில் அமைதியையும் தேசிய ஒருமைப்பாட்டையும் சிதறடிக்க முயல்வதையும் காண்பிக்கிறது.எனவே, இப்போது யாருக்கு நாட்டுப்பற்று இல்லை?”, என்றவர் காட்டமாக வினவினார்.

நேற்று ஒரு நிகழ்வில் பேசிய அப்துல் லத்திப், பஹாசா மலாயுவை ஒதுக்கிவிட்டு  அந்நிய மொழிகளை பதாகைகளில் பயன்படுத்துவதைக் குறை கூறினார்.

மசீச அதன் கூட்டத்தை மெண்டரின் மொழியில் நடத்துவதை நாட்டுப்பற்ற செயல் என்றார்.

மசீச-வின் அறிக்கைகளில் பெரும்பாலும் மும்மொழிகள் பயன்படுத்தப்படுவதாக ஹெங் கூறினார்.அதன் ஆண்டுக்கூட்டங்களிலும் மற்ற நடவடிக்கைகளிலும் தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அது பல்வேறு மொழிகளையும் பயன்படுத்துகிறது.

“அப்துல் லத்திப் மசீசவின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் பற்றி அறியாதவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

“கபேனா தலைவர், தாமும் தாம் சார்ந்துள்ள நிறுவனமும் கேலிக்கு ஆளாவதைத் தவிர்க்க, மேலும் திறந்த மனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.நாட்டுப்பற்று என்பதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதைக் கைவிட வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.