‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற அம்னோ பிரதிநிதியைச் சாடினார் மசீச தலைவர்

இஸ்லாமிய ஹுடுட் சட்டத்தை ஜோகூரில் முஸ்லிம்கள், முஸ்லிம்-அல்லாதார் என எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடியுள்ளார்.

ஆயுப் “புத்தி கெட்டுப்போய்” அப்படி மொழிந்திருக்கிறார் என்று சுவா நேற்றிரவு தம் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“ஜோகூர் அம்னோ சட்டமன்ற உறுப்பினரிடம் சொல்வதற்கு விசயங்கள் இல்லை அதனால்தான் ஜோகூரில் முஸ்லிம்-அல்லாதார்மீதும் ஹூடுட் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்திருக்கிறார்”.

அதை மசீச “திட்டவட்டமாக” எதிர்க்கும் என்றாரவர்.

எல்லா சமயத்தவரிடையேயும் உண்மையான ஹூடுட் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ஜோகூர் முந்திகொள்ள வேண்டும் என்று ஆயுப் நேற்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

இது பாஸின் ஹூடுட் சட்டம் போன்றதல்ல என்று கூறிய அவர்,  முஸ்லிம்களுக்கு மட்டுமே  ஹூடுட் சட்டம் என்று பாஸ் கூறுவதால் அது “பாரபட்சமானது” என்றார்.

அவரது நிலைப்பாட்டால் பிஎன்னின் இரண்டாவது மிகப் பெரிய பங்காளிக்கட்சியான மசீசவுக்குத்தான் தலைவலி.

ஹூடூட் சட்டத்தைக் குறைகூறும் மசீச அதை அமல்படுத்தும் பாஸின் திட்டம் வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பயமுறுத்தி விரட்டிவிடும் என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளது.

இப்போது ஆயுப் அதையே முன்மொழிந்திருப்பதால் அதற்கெதிராக மசீச என்ன செய்யப்போகிறது, இவ்விசயத்தில் பங்காளிக் கட்சியான அம்னோவை எதிர்க்கும் துணிச்சல் அதற்கு உண்டா என்றெல்லாம்  இணையமக்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

“சுவா,உங்கள் மெளனத்தை ஜோகூர் அம்னோ முன்மொழிந்திருப்பதை வழிமொழிவதாக பொருள் கொள்வதா அல்லது பெரிய அண்ணன் அம்னோவை எதிர்க்கும் துணிச்சல் இல்லை  என்று எடுத்துக்கொள்வதா?”, என்றொருவர் டிவிட்டரில் வினவியிருந்தார்.

இன்னொருவர், யுவென் ஹோ என்பார், “ஜோகூரில் எல்லாருக்கும் ஹூடுட் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர் விரும்புகிறார்… மசீச சூப்பர் ஹீரோக்கள் என்ன சொல்கிறார்கள்?”, என்று கிண்டலாகக் கேட்டிருந்தார்.

TAGS: