ஈராக் தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் (ISA) சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் நாட்டுக் கைதி ஒருவர் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி மலேசிய அரசாங்கத்திடம் விவரங்களைப் பெற முயன்று வருகிறது.
“மலேசியாவின் அதிகாரத்துவ வட்டாரங்கள்வழி”அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தூதர் அமால் மவுசா உசேனின் அலுவலகம், மலேசியாகினி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சலில் தெரிவித்தது.
“ஈராக்கிய கைதியின் வழக்கு பற்றிய விவரங்களைப் பெற மலேசிய அரசாங்க வட்டாரங்கள் வழி முயன்று வருகின்றோம் என்பதை ஈராக்கிய குடியரசின் தூதரகம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது”, என்று அந்த மின்னஞ்சல் கூறிற்று.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈராக்கிய கைதிகளின் நிலை பற்றி அறிந்துகொள்வது தூதரகத்தின் கடமைகளில் ஒன்று எனவும் அது கூறியது.
ஈராக்கிய கைதியான சமி ஹம்மத் உள்பட, தடுப்புக் கைதிகள் கமுந்திங் முகாமுக்கு அனுப்பப்படுமுன்னர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டிருந்த 60நாள்களில் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறினர் என்ற தகவலை மலேசியாகினி கடந்த மாதம் அறிவித்திருந்தது.
முகாமிலிருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட குறிப்புகளில் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்ட விதங்களை சமியும் மற்ற கைதிகளும் விவரித்திருந்தனர்.சமி பல தடவை தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூட கூறியிருந்தார்.
அந்த ஈராக்கியர் பின்னர் தம் வழக்குரைஞர் ஃபாடியா நட்வா பிக்ரிவழியாக தாம் சித்திரவதை செய்யப்பட்டது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த காலத்தில் தாமும் மற்றவர்களும் சித்திரவதைக்கு ஆளானதாக அவர் கூறினார். உடல்முழுக்க மிளகாய் சாந்து பூசப்பட்டதாகவும் நிர்வாணமாக்கி படம் பிடிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சமியின் கூற்றின் தொடர்பில் போலீசாரின் கருத்தை அறிய அவர்களை மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர்கள் ‘சித்திரவதைக் குறிப்புகளில்’ சொல்லப்பட்டவை “தீய நோக்கம்கொண்டவை”, ஆதாரமற்றவை” என்று கூறித் தள்ளுபடி செய்தார்கள்.
12ஆம் நாளாக உண்ணாநிலை போராட்டம்
இதனிடையே, மலேசிய ஐஎஸ்ஏ தடுப்புக் கைதியான பட்சுல்லா அப்துல் ரசாக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 12நாள்கள் ஆகின்றன.
மே மாதம் ஒரு உண்ணாவிரதம் இருந்த பின்னர் பட்சுல்லாவும் இன்னொரு கைதியான ரசாலி கசானும் மீண்டும் ஒரு புதிய உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர்.
ஜுன் 26-இல் மேலும் எழுவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து ரசாலி அவரது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.நேற்றுக் காலை அவரைச் சென்று கண்ட அவரின் குடும்பத்தார், ரசாலி அவரின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அடிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினர்.
இந்த போராட்டம் பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அமைச்சு “அடுத்த வாரம்” அது பற்றி விளக்கும் என்றார்.