பிகேஆர்: புத்ராஜெயா ஹிட்லர், ஸ்டாலின் பாணியிலான ஒடுக்குமுறையைப் பின்பற்றுகிறது

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் அன்வார் இப்ராஹிம் இரண்டு இதர பிகேஆர் பிரமுகர்களுக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுக்களை  சுமத்தியுள்ளதின் மூலம் நஜிப் நிர்வாகம் தனது அதிகாரத்தைத் தவறாகப்  பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீசார், சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் மீது தமக்குள்ள கட்டுப்பாட்டின் மூலம் அந்தப் புதிய குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் எதிரிகள் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்திய அடால்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் பின்பற்றிய வழிகளைப் போன்று நஜிப் நிர்வாகமும் குற்றச்சாட்டுக்களை தயாரித்துள்ளது என அவர் சொன்னார்.

“அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை. அவை அரசியல் நோக்கம் கொண்டவை. அரசாங்க அதிகாரம் அதிர்ச்சியூட்டும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சாட்டி ஜெயிலில் அடைப்பது வன்முறையான, சர்வாதிகார, ஜனநாயகத்தை பின்பற்றாத ஆட்சிகள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைகள்,” என்றார் அவர்.

சட்ட ஆட்சி பற்றி முழுமையாக கவலைப்படாமல் சட்ட நடைமுறைகள் தில்லுமுல்லு செய்யப்படுவதாகவும் சுரேந்திரன் தெரிவித்தார்.

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் அன்வார் மீதும் மற்றவர்கள் மீதும் சுமத்தப்பட்ட எல்லாக் கிரிமினல் குற்றச்சாட்டுக்களையும் நஜிப் நிர்வாகம் கைவிடுவதோடு எதிர்க்கட்சிகளுடன் உருப்படியான அரசியல் கலந்துரையாடலிலும் விவாதங்களிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் பொது மக்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குழுவுக்கு உடந்தையாக இருந்ததாக அன்வார், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் மீது இன்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் மணி 2.30க்கும் 3.00 மணிக்கும் இடையில் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும் அந்த மூவர் மீது புதிய சட்டத்தின்  4(2)© பிரிவின் கீழ் மே 22ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.