சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதியை வெளியிட அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
“பக்காத்தான் ராக்யாட்டின் தேர்தல் வியூகங்களை நான் வெளியிடப் போவதில்லை,” என்றார் அவர்.
“13வது பொதுத் தேர்தலுக்கான தேதிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்காதது போல நானும் அதே காரணங்களுக்காக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதியை வெளியிடப் போவதில்லை,” என்றார் காலித்.
2012ம் ஆண்டுக்கான தனது வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமது நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் 2012 ஜுன் மாதத்திற்கு முன்னதாக சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது என காலித் ஏற்கனவே கூறியிருந்தார்.
“எங்களுக்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு எனக்கு உள்ள உரிமையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் தேதி குறித்த நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக எந்தத் திட்டத்தையும் உறுதி செய்ய முடியவில்லை என்றும் காலித் விளக்கினார்.