குதப்புணர்ச்சி வழக்கு II மீது நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியது

அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தை ஏற்றுக் கொள்வது பாதுகாப்பற்றது என்றும் அதனால் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வழங்கிய சாட்சியத்தை அது வலுப்படுத்த முடியாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சைபுலிடமிருந்து எடுக்கப்பட்டு டாக்டர் சியா லே ஹொங் சோதனை செய்துள்ள மாதிரிகளின் நேர்மை குறித்து இந்தக் கட்டத்தில் 100 விழுக்காடு உறுதி என நீதிமன்றம் கருத முடியாது என நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா-வின் 80 பக்க எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

“ஆகவே அந்த மாதிரிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் சியா-விடமிருந்து கிடைத்த டிஎன்ஏ முடிவுகளை நம்புவது பாதுகாப்பாக இருக்காது. அப்படி இருக்கும் போது ஊடுருவல் மீது சைபுல் அளித்த சாட்சியத்தை வலுப்படுத்துவதற்கு ஆதாரம் ஏதுமில்லை.”

“ஊடுருவல் மீது சைபுலின் சாட்சியம் மட்டுமே நீதிமன்றத்திடம் உள்ளது. இது பாலியல் குற்றம் என்பதால் வலுப்படுத்தப்படாத புகார்தாரரின் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கு எப்போதும் தயங்குகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டு குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை செய்யப்படுகின்றார்,” நீதிபதி ஜபிடின் தீர்ப்பளித்தார்.

அந்த குதப்புணர்ச்சி வழக்கில் மொத்தம் 27 அரசு தரப்புச் சாட்சிகளும் ஏழு பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளும் சாட்சியளித்தார்கள்.

மாதிரிகளின் நேர்மை விட்டுக் கொடுக்கப்பட்டதா ?

மாதிரிகள் குறித்து அரசு தரப்பு கொண்டு வந்த நிபுணத்துவ சாட்சிகளும் பிரதிவாதித் தரப்பு கொண்டு வந்த நிபுணத்துவ சாட்சிகளும் ஒத்துப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த மாதிரிகளின் நேர்மை குறித்த கேள்வியை நீதிபதி எழுப்பினார்.

“எந்த நிபுணர் சொல்வது சரி ? அந்த இடத்தில் மாதிரிகளின் நேர்மை குறித்து பிரச்னை முன்னுக்கு வருகிறது. புகார்தாரரிடமிருந்து எடுக்கப்பட்ட பின்னர் சோதனைக்காக சியாவை அவை சென்றடைவதற்கு முன்னர் அந்த மாதிரிகள் எப்படிக் கையாளப்பட்டன என்ற விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன,” என அவர் சொன்னார்.

எடுக்கப்பட்ட எல்லா மாதிரிகளும் கோலாலம்பூர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் கலங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டு, சிட்டை ஒட்டப்பட்டு மூடப்பட்டன (சீல் வைக்கப்பட்டன). பி27 என அடையாளம் கூறப்பட்ட எல்லா மாதிரிகளும் அடங்கிய பிளாஸ்டிக் பை புலனாய்வு அதிகாரி டிஎஸ்பி ஜுட் பிள்ஷியஸ் பெரெரா-விடம் ஒப்படைக்கப்பட்டன.

“ஜுட் தமது அலுவலகத்தில் பி27ஐ (பிளாஸ்டிக் பை) வெட்டித் திறந்தார் என்பதில் தகாராறு ஏதுமில்லை. அந்தக் கலங்களில் மீண்டும் தனித்தனியாக சிட்டைகளை ஒட்டுவதற்கான அவ்வாறு செய்ததாக ஜுட் கூறியுள்ளார். என்னுடைய கருத்துப்படி, அது அவசியமில்லாதது. ஏனெனில் அந்தக் கலங்கள் மாதிரிகளை  எடுத்தவர்களினால் ஏற்கனவே வைக்கப்பட்டு சிட்டைகள் ஒட்டப்பட்டு விட்டன,” என்றார் அவர்.

அந்த மாதிரிகளின் நேர்மை விட்டுக் கொடுக்கப்படவில்லை என்ற அரசு தரப்பு நிலையை நீதிபதி சுட்டிக் காட்டினார். என்றாலும் கலங்களைச் சோதனை செய்த மூன்றாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான டாக்டர் டேவிட் வெல்ஸ் அவை சேதப்படுத்த முடியாத தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

“அவை சீல் வைக்கப்பட்ட முறையையும் சீல்-களாக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பார்க்கும் போது அந்த சீல்-லை நீக்க முடியும். மீண்டும் சீல் வைக்க முடியும் என்பதே அதன் அர்த்தமாகும். பி27ஐ வெட்டித் திறந்ததின் மூலம் மாதிரிகளின் நேர்மை மீதான நம்பிக்கை போய் விட்டது,” என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.