பக்காத்தான் தோற்றால் அன்வார் அரசியலைவிட்டு விலகுவார்?

பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோற்றால் தாம் அரசியலைவிட்டு விலகலாம் என்று பிகேஆர் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

நேற்று பினான்சியல் டைம்ஸில் வெளிவந்த ஒரு நேர்காணலில், தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறவில்லை என்றால் தாம் “ஆசிரியர் தொழிலுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்” என்றாரவர்.

“எங்கள் தேர்தல் அறிக்கையை வழங்கி இருக்கிறோம்,கொள்கைகளை விவரித்திருக்கிறோம். எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் தொடர்வேன், இல்லையேல் ஆசிரியர்தொழிலுக்குத் திரும்பிச் செல்வது பற்றி யோசிப்பேன்”, என்றவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

13வது பொதுத்தேர்தலே அன்வார் பிரதமராவதற்கு மேற்கொள்ளும் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம் என்று லண்டனிலிருந்து வெளிவரும் அந்நாளேடு கூறியிருந்தது.

பிரதமராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அன்வார்,65, “களைத்துப்போய்”க் காணப்படுவதாகவும் அது கூறியது.

இதற்குமுன் வந்த செய்திகள் எல்லாம், அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என்று அன்வார் நம்பிக்கையுடன் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.