ஹூடுட் சட்டம்: சந்தடியில்லாமல் பேசுவோம் என்கிறார் அம்னோ பிரதிநிதி

ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இனத்திருக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்ட அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹமட், இப்போது அப்பிரச்னையை சந்தடியில்லாமல் பேச வேண்டும் என்று கூறுகிறார்.

இப்போது அவ்விவகாரம் குறித்து பேச அயுப் மறுத்து விட்டார் என்று மலாய் நாளிதழ் சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது குறித்து வெளிப்படையாக பேசினால், அது மலேசிய சமுதாயத்தில் குழப்பத்தை உண்டுபண்ணலாம் என்று தாம் அஞ்சுவதாக அவர் காரணம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, அயுப் கூறியிருந்த இக்கருத்துக்கு மசீச தலைவர் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.

“இப்பிரச்னைக்கு தவறான அர்த்தம் கொடுக்கப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன் ஏனென்றால் அதற்கு தெளிவான, ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது. நான் ஒரு நிபுணர் அல்லர். நான் அதை இன்னும் கற்க வேண்டியுள்ளது.

“இப்பிரச்னையை இஸ்லாமியச் சட்டத்தில், குறிப்பாக ஹூடுட் சட்டத்தில், நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களுக்கிடையில் விவாதிக்கப்பட வேண்டும்”, என்று அவர் கூறியதாக நாளிதழ் கூறுகிறது.

 

 

 

TAGS: