அம்னோ இளம் உலாமாக்கள் ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை வரவேற்கிறார்கள்

அம்னோவின் இளம் உலாமா செயலகம், ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறது.

அதன் தலைவர் பாதுல் பாரி மாட் யஹயா, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்னும் இரண்டு மூன்று நாள்களில் ஜோகூர் அம்னோவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

அக்கடிதம், அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட், ஜூன் 20-இல் ஜோகூர் சட்டமன்றத்தில் ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழிந்ததற்கு ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துக்கொள்ளும் என்று பாதுல் கூறினார்.

அம்மாநிலத்தில் ஹூடுட் சட்டத்தை எப்படி அமல்படுத்தலாம் என்று அது கருத்துகளையும் ஆலோசனைகளையும்  எடுத்துரைக்கும்.

ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதில் உதவ உலாமா செயலகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜோகூரில் ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மொழிந்த ஆயுப், கிளந்தானில் அமலில் உள்ள பாஸின் ஹூடுட் சட்டத்துக்கும் அதற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு என்றார். அது, பாகுபாடின்றி ஜோகூரில் உள்ள எல்லா இனங்களிடையேயும் அமலாக்கம் செய்யப்படும் என்றார். 

அதனை வரவேற்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் அம்னோவைப் பாராட்டினார்.

ஆனால், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், ஆயுப்பைச் சாடினார். அவர்  “புத்தி கெட்டுப் பேசுகிறார்” என்றார்.

அதனால் பின்வாங்கிய ஆயுப்,   அவ்விவகாரம் மலேசியரிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இனி, அதை பகிரங்கமாக விவாதிக்காமல் இரகசியமாக விவாதிப்பதே நல்லது என்றார்.

 

 

TAGS: