நாடு முழுவதும் உள்ள சீனப் பள்ளிகளில் மண்டரினை அதிகாரத்துவ மொழியாக்க வேண்டும் என டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக்கூடக் குழுக்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை காபேனா எனப்படும் மலேசிய தேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனம் ஒப்புக் கொள்ளவில்லை.
அந்தக் கோரிக்கை பாஹாசா மலேசியா இந்த நாட்டின் அதிகாரத்துவ மொழி எனக் கூறும் கூட்டரசு அரசமைப்புக்கு முரணாக உள்ளது என காபேனா-வின் முதல் தலைவர் பேராசிரியர் அப்துல் லத்தீப் அபு பாக்கார் கூறினார்.
“இந்த நாட்டில் தேசிய மொழியின் நிலைக்கு சவால் விடுக்கும் வகையில் மற்ற மொழிகள் ஒரு பிரச்னையாக மாற்றப்படக் கூடாது,” என அவர் ஜார்ஜ் டவுனில் செய்ண்ட் ஜார்ஜ் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் காபேனா பயிற்சி ஒன்றை தொடக்கி வைத்த போது கூறினார்.
டோங் ஜோங்-கின் கோரிக்கைகளைப் புறக்கணிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை காபேனா சமர்பிக்கும் என்றும் அவர் சொன்னார்.
“பாஹாசா மலேசியாவின் சரியான நிலையைத் தற்காப்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அனைத்து அரசு சாரா அமைப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
தேசிய மொழியை ஒவ்வொரு குடிமகனும் சரளமாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு வாய்மொழித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்பட பல அம்சங்கள் மகஜரில் இடம் பெறும் என்றும் அப்துல் லத்தீப் சொன்னார்.
பொது மக்கள் பாஹாசா மலேசியாவை மக்களை வேறுபடுத்தும் மொழி எனக் கருதாமல் அதனை தேசிய மொழியாக மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெர்னாமா