துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது பழி போடுகிறார் டாக்டர் மகாதீர்

மலாய்க்காரர்களின் ‘முட்டாள்தனத்தினால்’ பெரிய இனம் ஒன்று சிறுபான்மை இனங்களுடைய கோரிக்கைகளுக்கு அடி பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கோரிக்கைகளில் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி வழங்கும் சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்ததும் அடங்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

உத்துசான் மலேசியா நாளேட்டின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பான மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் மகாதீர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மலாய்க்காரர்களின் நடப்பு இக்கட்டான சூழ்நிலை எனத் தாம் கூறிக் கொள்ளும் விஷயம் பற்றி அவர் அந்தப்  பேட்டியில் விவாதித்துள்ளார்.

மலாய் சமூகம் சுதந்திரம் பெற்றது முதல் தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தனது பெரும்பான்மை நிலையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.

கடந்த காலத்தில் பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருந்தால் மட்டுமே நமக்கு அரசாங்க வேலை கிடைக்கும். நாம் இப்போது துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியின் டிப்ளோமா சான்றிதழையும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.”

“இதற்கு எல்லாம் காரணம் வாக்குகளே. மலாய்க்காரர்களின் முட்டாள்தனத்தினால் அவை எல்லாம் நிகழ்கின்றன.”

“சுதந்திரம் பெற்ற போது மலாய்க்காரர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக அந்த மலாய்ச் சமூகம் பெரும்பான்மையாக இருப்பதாக நாம் ஒப்புக் கொண்டோம்.

“ஆனால் மலாய்க்காரர்கள் இப்போது அதற்கு நேர்மாறாகச் செய்து கொண்டிருக்கின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக பிரிந்து தங்கள் சொந்தப் பெரும்பான்மையையே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். ”

அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு மற்ற இனங்களுடைய வாக்குகள் தேவைப்படுகின்றது,” என்றார் அவர்.

ஜுன் 27ம் தேதி மிகவும் கோலாகலமான முறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். அதற்கு மகாதீர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது நஜிப்புக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு அடி எனக் கருதப்படுகின்றது.

1969ம் ஆண்டு அந்தக் கல்லூரியைத் தொடங்கிய மசீச-வுக்கு அந்த அங்கீகாரம் பெரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.

அண்மையில் அந்தக் கல்லூரிக்கு வருகை அளித்த நஜிப் அது வழங்கும் 70க்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு பின் தேதியிடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரியின் பட்டதாரிகள் அரசாங்கச் சேவையில் சேருவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ள சீர்திருத்தங்களுக்கும் சொந்த ஆதாயத்துக்காக தங்கள் நிலங்களையும் அடையாளத்தையும் விட்டுக் கொடுத்த பண்டைய மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பிணைப்பு இருப்பதாகவும் மகாதீர் கூறிக் கொண்டார்.

“இப்போது மலாய்க்காரர்கள் பிளவுபட்டிருப்பதால் வாக்குகளுக்காக நாம் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனால் வாக்குறுதிகளை வழங்க ஒவ்வொருவரும் முந்துகின்றனர்.”

“உண்மையில் எதிர்க்கட்சிகள் இந்த நாட்டை விட்டுக் கொடுக்க விரும்புகின்றன. இறுதியில் இது சிங்கப்பூர் போலாகி விடும்.”

“இது மலாய்க்காரர்களின் பழைய வழக்கமாகும் அதாவது யாராவது ஒருவர் ரொக்கம் கொடுக்க முன் வந்த போது அவர்கள் சிங்கப்பூரையும் பினாங்கையும் விற்று விட்டார்கள்.”

ஆகவே இப்போது வரலாறு திரும்புகிறது. யாரோ ஒருவர் பிரதமராக வேண்டும் என விரும்புவதால் அவர் மலாய் இனம் அழிக்கப்படுவதை அனுமதிக்கத் தயாராக இருக்கிறார்,” என்றார் அந்த முன்னாள் பிரதமர்.

சிறுபான்மை இனங்களுடைய கோரிக்கைகள் அதிகரித்து வருவது பற்றிக் கருத்துரைத்த மகாதீர் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மை இனங்களைக் காட்டிலும் இங்கு அவை அதிகமாக அனுபவித்து வருகின்றன எனச் சொன்னார். அவை அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மலாய்க்காரர்கள், இஸ்லாம் ஆகியவற்றின் நிலையை மதிக்க வேண்டும்.”

“நாம் அமெரிக்காவுக்குப் போனால் அங்கு ஆங்கிலம் தேசிய மொழியாகும். ஆனால் இங்கு நாம் கூட்டங்களிலும் செராமாக்களிலும் சிறுபான்மை இனங்களுடைய மொழியில் சில சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே நமது தேசிய மொழியின் நிலை என்ன ? ” என அவர் வினவினார்.

அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதற்கு மேல் மற்ற இனங்கள் கோரினால் மலாய்க்காரர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“அவை மலாய் சலுகைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என விரும்பினால் அவை தங்கள் மொழிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு தாய் மொழிப் பள்ளிகளை மூட வேண்டும்,” என்றார் மகாதீர்.