சிங்கப்பூர் பிரதமருடைய பத்திரிக்கை செயலாளராக லிம் கிட் சியாங் இருந்ததில்லை என்பதை உத்துசான் ஒப்புக் கொண்டுள்ளது

டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார் எனத் தவறுதலாக குறிப்பிட்டு விட்டதை உத்துசான் மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்க அமைச்சு ஒன்றின் பத்திரிக்கைப் பிரிவில் மட்டுமே தாம் வேலை செய்ததாக லிம் தெளிவுபடுத்தியுள்ளார் என உத்துசானின் ஞாயிறு பதிப்பில் வெளியான ‘Bisik-bisik’ பகுதியில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“லிம் அந்தப் பதவியை வகித்தார் என இணைய ஆதாரங்கள் உட்பட பல தரப்புக்கள் எழுதியிருப்பதால் அந்தத் தவறு நிகழ்ந்து விட்டது,” என  அவாங் செலாமாட் அதில் எழுதியுள்ளார். அவாங் செலாமாட் என்பது  உத்துசான் ஆசிரியர் பகுதி ஊழியர்களுக்கான புனை பெயர் ஆகும்.

கடந்த வாரத்திய ‘Bisik-bisik’ பகுதியில் ஏற்பட்ட அந்தத் தவறு மிகச் சிறியது என்றும் டிஏபி-க்கும் பிஏபி என்ற சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சிக்கும் இடையில் நிலவும் வரலாற்றுப்பூர்வமான உணர்வுப்பூர்வமான உறவுகளை மறுக்க முடியாது என்றும் அவாங் செலாமாட் குறிப்பிட்டுள்ளார்.

பிஏபி, டிஏபி வழியாக பிஎன் வீழ்ச்சிக்கு சதி செய்வதாக கடந்த வாரம் அந்த அம்னோ பத்திரிக்கை சாடியது.  சிங்கப்பூர் அரசதந்திரிகள் தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் மலேசியாவை அவமானப்படுத்துவதாகவும்  இன்றைய கட்டுரை குற்றம் சாட்டியது.

“சிங்கப்பூரை வலுவாகக் கண்டிக்கும் அறிக்கையை டிஏபி வெளியிடாது. ஆகவே அவாங் செலாமாட் இந்த நாட்டின் ஆட்சியுரிமையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு குரல் கொடுக்க வேண்டியுள்ளது.”