வான் அஜிஸா 13வது பொதுத் தேர்தலில் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடலாம்

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடலாம்.

சினார் ஹரியான் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என வான் அஜிஸா சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

“நான் எங்கு போட்டியிடுவது என்பதை நான் தேர்வு செய்ய முடியும் என்றாலும் ஆதரவாளர்களிடமிருந்து கருத்துக்களை நான் பெறுவது அவசியமாகும். எனக்கு எந்த இடம் பொருத்தமானது என்பதை கட்சி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாக நான் எண்ணுகிறேன்,” என அவர் நேற்று பினாங்கில் கூறினார்.

பினாங்கில் பிகேஆர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

தமது கணவரும் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார் இப்ராஹிம் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு உதவியாக 2008ம் ஆண்டு ஜுலை மாதம் வான் அஜிஸா தமது பெர்மாத்தாங் எம்பி பதவியைத் துறந்தார்.

1999ம் ஆண்டு ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு அன்வார் பெர்மாத்தாங் எம்பி-யாக இருந்து வந்தார். வான் அஜிஸா பின்னர் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

வான் அஜிஸா  ராஜினாமா செய்ததின் விளைவாக அவர் 2013ம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் அவர் எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.