சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு தலாம் கார்ப்பரேஷன் சென் பெர்ஹாட் கொடுக்க வேண்டிய கடன்கள் தொடர்பில் தனது வெள்ளை அறிக்கையை சிலாங்கூர் வெளியிட வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தகைய அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக 2010ம் ஆண்டு இறுதியில் மாநிலச் சட்ட மன்றத்தில் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார்,” என கோலா குபு பாரு தொகுதிக்கான மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் வோங் கூன் முன் கூறினார்.
“ஆனால் இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் வெள்ளை அறிக்கைக் கண்ணுக்கு தென்படவில்லை. இப்போது லாபிஸ் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் அந்த விஷயத்தை எழுப்பியுள்ளார். 2013ம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்துக்காக காத்திருக்குமாறு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“சில தகவல்களை” மறைப்பதற்காக தாமதம் செய்யப்படுகின்றது எனத் தாம் கருதுவதாக சிலாங்கூர் மசீச தொடர்புக் குழுச் செயலாளருமான வோங் சொன்னார்.
அந்த விவகாரத்தில் ஒரு பில்லியன் ரிங்கிட் ஊழல் நிகழ்ந்துள்ளதாக தான் குற்றம் சாட்டுவதின் விவரங்களை மசீச வெளியிடும் வரையில் தாம் எந்தக் கருத்தும் சொல்லப் போவதில்லை என காலித் கூறியதாக நேற்று பெர்னாமா தகவல் வெளியிட்டது.
மசீச அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுவது “பெரிய தவறு” என டிஏபி எம்பி டோனி புவா கூறியுள்ளதற்கு மசீச இன்னும் பதில் அளிக்கவில்லை.
வீடமைப்பு நிறுவனமான தலாம் தொடர்பில் “சந்தேகத்துக்குரிய” ஒரு பில்லியன் ரிங்கிட் ஊழல் நிகழ்ந்துள்ளதாக மசீச இளம் தொழில் முனவைர் பிரிவுத் தலைவர் சுவா தீ யோங் முதலில் தகவல் வெளியிட்டார்.
“கூடுதல் தகவலுக்காக” தான் காத்திருப்பதாக மட்டும் அவர் அப்போது கூறினார்.