தற்போது பிரிட்டனில் நாடு கடந்து வாழும் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாடு திரும்புவதற்கு உதவியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்குமாறு அந்த அமைப்பு மலேசிய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
பாஸ்போர்ட் “இருந்தாலும் இல்லாவிட்டாலும்” ஆகஸ்ட் முதல் தேதி மலேசிய மண்ணை மிதிக்க வேதமூர்த்தி எண்ணியிருப்பதாக ஹிண்டராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.
“இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் முழு உரிமைகளுடன் கௌரவமாகத் தாயகம் திரும்ப அவர் விரும்புகிறார்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஆகவே லண்டனில் உள்ள மலேசியத் தூதரகம் அவருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்,” என பினாங்கைத் தளமாகக் கொண்ட கணேசன் சொன்னார்.
தமது சகாவின் பயணப் பத்திரத்தை முடக்கி வைப்பது என அப்போதைய பிரதமரும் உள்துறை அமைச்சருமான அப்துல்லா அகமட் படாவி முடக்கி வைத்தார்.
நடப்பு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அந்த முடிவை ரத்துச் செய்து வேதமூர்த்திக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்குமாறு சம்பந்தப்பட்ட வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கணேசன் கேட்டுக் கொண்டார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பிரிட்டனில் நாடு கடந்த் வாழும் வேதமூர்த்தி, தாம் மலேசியாவுக்குத் திரும்ப எண்ணம் கொண்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
வேதமூர்த்தி நாடு கடந்து வாழ வேண்டிய சூழ்நிலையை மலேசிய அதிகாரிகளே ஏற்படுத்தினர் என அவர் வலியுறுத்தினார்.
“அது தர்மசங்கடத்தை தவிர்க்கும்”
2008ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிரிட்டனில் உள்ள காட்விக் விமான நிலையத்தில் யூகே எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனம் வேதமூர்த்தியின் பாஸ்போர்ட்டை மீட்டுக் கொண்டது பற்றி குறிப்பிட்ட போது கணேசன் அவ்வாறு கூறினார்.
அதே ஆண்டு மார்ச் 17ம் தேதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் வழி மலேசிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்த பாஸ்போர்ட் மீட்டுக் கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் முதல் தேதிக்குள் வேதமூர்த்திக்கு பயணப் பத்திரம் வழங்கப்படாமல் போனாலும் மலேசிய மண்ணில் அந்தத் தேதியில் இருப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கணேசன் குறிப்பிட்டார்.
“நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளது போல சுமூகமான முறையில் அவருக்கு மலேசிய அரசாங்கம் பாஸ்போர்ட்டை வழங்கினால் அந்தப் பிரச்னைகளுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.”
“மலேசியாவில் ஒரம் கட்டப்பட்டுள்ள ஏழை இந்தியர்கள் சார்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கை தொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு தாம் நாடு கடந்து வாழ்ந்த நேரத்தை வேதமூர்த்தி பயன்படுத்திக் கொண்டார்,” என்றும் கணேசன் தெரிவித்தார்.
அந்த வழக்கு ஜுலை 2ம் தேதி பதிவு செய்யப்பட்டு விட்டதால் வேதமூர்த்தி தாயகம் திரும்பத் தயாராக இருக்கிறார் என்றும் நாட்டுக்குள் தமது மனித உரிமைப் பணிகளை தொடர் அவர் எண்ணியுள்ளார் என்றும் அவர் சொன்னார்.