கைரி: ஒன்றுமில்லா விவகாரத்திற்கு ஏன் இத்தனை ஆரவாரம்?

ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த ஜோகூர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முன்மொழிந்ததை ஒதுக்கித் தள்ளிய அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஒன்றுமில்லா ஒரு விசயம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

அது கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டின் “தனிப்பட்ட கருத்து”, கட்சியின் கருத்தல்ல. கைரி, நேற்று வங்சா மாஜுவில் பிஎன் இளைஞர் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இப்போதைக்கு அதை அமல்படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது.எங்களின் அந்த நிலைப்பாடு தெளிவாக தெரிந்த ஒன்றுதான்”.

அதற்காக, அம்னோ ஹூடுட்டை நிராகரிப்பதாக நினைக்கக்கூடாது, அது “திருக்குர் ஆனின் ஒன்றிணைந்த பகுதி” என்றார்.

அந்த விவகாரத்தால் பிஎன்னில் சச்சரவை ஏற்பட்டிருப்பதாகவும் ஹூடுட்டை அமல்படுத்தினால் மசீச கூட்டணியை விட்டுவிலகும் என்று கூறப்பட்டிருப்பதையும் ரெம்பாவ் எம்பியான கைரி மறுத்தார்.

“இவ்விவகாரம் தொடர்பில் மசீச ஏதாவது சொல்லத்தான் வேண்டியிருக்கும்.அது எங்களுக்குப் புரிகிறது.(ஹூடுட் பற்றிய கருத்து)அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கும்.ஆனால், அவை தனிப்பட்டவர்களின் கருத்துகள்.கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை அல்ல”, என்றார்.