தேர்தலுக்கு ரிம700மில்லியன், ஆனால் தேர்தல் ஒழுங்காக நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை

அரசாங்கம்,13வது பொதுத் தேர்தலுக்கு மேலும் ரிம600மில்லியனைப் பெற முனைந்துள்ள வேளையில் அப்பணம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று பிகேஆர் செனட்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று டேவான் நெகாரா வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய சைட் ஹுசேன் அலி,நேற்று கூடுதல் நிதிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

ஏற்கனவே 2012பட்ஜெட்டில் பொதுத் தேர்தலுக்காக ரிம40மில்லியன் ஒதுக்கப்பட்டது,இப்போது இதையும் சேர்த்து மொத்த தேர்தல் ஒதுக்கீடு ரிம700மில்லியனாகிறது.

“ தூய்மையான தேர்தலுக்கு உறுதிகூற முடியாத அரசாங்கம், இந்த ரிம700மில்லியனை எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பதுதான் புரியவில்லை”, என்று ஹுசேன் கூறினார்.

இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டை “நாட்டின் வரலாற்றில் மிகப் பெரியது” என்று வருணித்த சைட் ஹுசேன், ரிம360மில்லியன் தேர்தலை நடத்த செலவிடப்படும், மீதமுள்ள தொகை பாதுகாப்புக்கு என்றார்.

“பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பக்காத்தான் செராமாக்களில் நிறைய வன்செயல்களை நடத்துகிறார்கள்.அப்படியிருக்க தேர்தல் பாதுகாப்புக்கு அதிகாரிகளால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?”

அரசாங்கம் உடனடியாக தேர்தல் தேதியை முடிவு செய்து தேர்தல் தொடர்பில் ஓராண்டுக்காலமாகக் கூறப்பட்டுவரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மற்ற நாடுகள் ஓராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கும்போது மத்திய அரசு மட்டும் திடீர் தேர்தல் நடத்துவதில் பேரார்வம் கொண்டிருப்பதை அவர் சாடினார்.

“பிஎன் பொதுத் தேர்தல் தனக்குச் சாதகமாக இருத்தல் வேண்டும் என்பதிலேயே அது குறியாக உள்ளது”.

செய்தியாளர் கூட்டத்தில் இருந்த பாஸ் செனட்டர் முகம்மட் யூசுப் ஹுசேன், 13வது பொதுத் தேர்தல் எப்போது எப்போது என்று நாடே அமைதி இழந்திருப்பதாகக் கூறினார்.

“தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதால், விருந்துக்கு ஏற்பாடு செய்வது, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது,ஹஜ் யாத்திரை மேற்கொள்வது. பயணம் செய்வது, அரசியல்வாதிகள் வீடு மாறுவது போன்றவற்றை முடிவு செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

“முதன்முதலாக ஹஜ்ஜுப் பயணத்துக்குத் திட்டமிட்டுள்ள ஒருவர் தேர்தல் வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டு தேர்தல் ஹஜ்ஜு யாத்திரை காலத்தில் நடத்தப்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?”.

மத்திய, மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பில் மத்திய அரசு பக்காத்தான் மாநிலங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்ற கூறப்படுவதைத் தாம் ஆதரிப்பதாக யூசுப் கூறினார்.

அதன் தொடர்பில் இன்று காலை மேலவையில்  வினவியதாகவும் ஆனால், பதில் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.