அரச மலேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் மற்றும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் ஆகியோரும் நமது நாடும் நாட்டு மக்களும் பாதுகாப்பான சூழ்நிலையில்தான் உள்ளனர் என அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
அண்மையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் பயன்படுத்தல் மற்றும் வைத்திருத்தல், ஏமாற்றுப் பேர்வழிகள் என பலவித குற்றச் செயல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை அனைவரும் அறியும் இந்த வேளையில், நாம் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளோம் எனவும் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது என கூறும் என்.கே.ஆர்.ஏ புள்ளி விவரங்கள் பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் உள்ளாக்கியுள்ளது எனவும் இது உண்மைக்கு புறம்பாக உள்ளது எனவும் சார்ல்ஸ் சாடினார்.
மக்களை மேலும் குழப்புவதையும் மற்றும் அலட்சிய போக்கையையும் நிறுத்தி விட்டு, அதிகரித்துக் கொண்டுவரும் குற்றச் செயல்களை எப்படி குறைப்பது எனும் திட்டங்களை மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் படி கேட்டுக் கொண்ட சார்ல்ஸ், தற்போது எத்திசை திரும்பி பார்த்தாலும் எதிர்பாரா சம்பவங்கள் மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளதையும் மக்கள் அச்சத்தில் நடமாடிக் கொண்டிருப்பதையும் நினைவுறுத்தினார்.
காவல்துறையினரின் ரோந்து, நடமாடும் காவல்துறை கண்காணிப்பு வண்டி, காவல்துறையினரின் வருகை அல்லது கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகள் பல வித குற்றச்செயல்களை பல இடங்களில் தடுக்கவும் குறைக்கவும் பேருதவியாகவும் இருக்கும் என கூறிய சார்ல்ஸ், வெறும் சாக்கு போக்கு கூறி மக்களை குழப்புவதை காவல்துறையினர் நிறுத்தி விட்டு குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கும் படி கேட்டுக் கொண்டார்.