தஸ்லிம் நேர்காணல்: நியட் தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம், அரசியல் பதவியில் அக்கறை கொண்டிருக்கவில்லை.இந்திய மலேசியர்களுக்கு உதவ சமுதாய சீரமைப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்படுமானால் ஒருவேளை அவர் அரசியலுக்கு வரலாம்.
பேராக் மாநில மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
பக்காத்தான் ரக்யாட் தம்மை அணுகி அடுத்த தேர்தலில் மாநில அல்லது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டது உண்மைதான் என்று தஸ்லிம் உறுதிப்படுத்தினார்.ஆனால், மந்திரி புசாராக நியமிக்கப்படும் சாத்தியம் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை என்றார்.
ஆனாலும், அவர் அதற்கு உடன்படவில்லை.
“என்னைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தைத் திருத்தி அமைக்கும் திட்டவட்டமான கொள்கை ஒன்று தேவை.அது இல்லாத நிலையில் இதிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை”, என்றாரவர். 30ஆண்டுகளுக்கு மேலாக அதற்காகவே போராடி வருகிறவர் அவர்.
இண்டர்லோக் நாவலுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்திய சமூகப் போராளியான தஸ்லிம், எந்தக் கட்சி “நேர்மையை, சமத்துவத்தை, நியாயத்தை”க் கடைப்பிடிக்கிறதோ அதைப் பின்பற்ற தயராக இருக்கிறார்.ஆனால், இந்திய சமூகம் தனக்கு இழைக்கப்பட்டதாக கருதும் அநீதிகள் இன்னும் களையப்படாமலேயே இருக்கின்றன என்றார்.
அந்த வகையில், பக்காத்தானிடம் நிரந்தரமான கொள்கைகள் இல்லை.அவ்வப்போதைய தேவைக்கேற்ப சில உருவாக்கப்படுகின்றன.இது ஏற்கத்தக்கதல்ல. சமூகத்தின் தேவைகளை உரத்த குரலில் எடுத்துச் சொல்ல அதைச் சேர்ந்தவர்களின் சிந்தனைக்குழு ஒன்றை அக்கூட்டணி வைத்திருக்க வேண்டும்.
“அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்”, என்றார்.
தமிழ்ப் பள்ளிகள், இந்து ஆலயங்கள் ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் பக்காத்தானின் முயற்சிகளுக்கும் பிஎன்னின் முயற்சிகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று தஸ்லிம் கூறினார்.
அதேவேளை, குறைகளைக் “காதுகொடுத்துக் கேட்கிறது” என்று பக்காத்தானை அவர் பாராட்டவும் தவறவில்லை.என்றாலும், ஏழைகளைக் கைதூக்கிவிட அது இன்னும் கூடுதலாக பாடுபட வேண்டும்.அதற்கான விரிவான திட்டங்கள் அதன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.
“இதுவரை (பக்காத்தான்) என்ன செய்தீர்கள்?அதுதான் என் கேள்வி.வேலை வாய்ப்பில், மாநில அளவிலாவது ஏதாவது செய்திருக்கலாமே?”, என்றார்.
பக்காத்தான் 2008-இல் வாக்குறுதிகள் அளித்தது.ஆனால், காப்பாற்றவில்லை.அதனால், இந்திய மலேசியரின் ஆதரவு ஓரளவு பிஎன்னுக்குத் திரும்பியுள்ளது.
பிஎன் கொள்கைகளையும் தஸ்லிம் சாடினார்.அவை இந்திய மலேசியரிடம் “பாகுபாடு காட்டுவதையும் அவர்களை ஓரங்கட்டுவதையும் நோக்கமாக”க் கொண்டவை என்றவர்
வருணித்தார்.
“…2008-க்குப் பின்னர் நீங்கள்(பிஎன்) என்னதான் செய்திருந்தாலும், அது பிஎன்/அம்னோவின் உண்மையான முயற்சி என்பதில் எனக்கு நம்பிக்கை வரவில்லை.எல்லாமே தேர்தல் தந்திரமாகத்தான் தெரிகிறது”.
அரசாங்கத்தின்மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்திய சமூகத்துக்கு விடுத்த அறைகூவல் பற்றிக் கருத்துரைத்தவர், “அதற்குப் பொருளாவது தெரியுமா அவருக்கு?” என்று வினவினார்.
இந்திய சமூகம் 51ஆண்டுகளாக அரசாங்கத்தின்மீதுதானே நம்பிக்கை வைத்திருந்தது.
“நஜிப் தனியாக எல்லாவற்றையும் செய்து வருகிறார்.1மலேசியா அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.ஆனால் அம்னோவில் மற்றவர்கள் எதுவும் செய்யக் காணோம்….அவர் சொல்வதைத்தான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“நாளை பிரதமர் இல்லையென்றால் என்னவாகும்?இஸ்லாம் ஹதாரி என்னவானது?”. நஜிப்புக்கு முன்னவரான அப்துல்லா அஹமட் படாவி முன்வைத்த ‘நாகரிக இஸ்லாம்’ கோட்பாட்டைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சமூக சீரமைப்புக் கொள்கைகளில் ஒன்றாக அரசாங்கம், மாணவர் தங்கும் விடுதிகளை அமைக்க வேண்டும் என்று கூறிய தஸ்லிம் அவற்றில் 80விழுக்காட்டு இந்திய மலேசிய மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார்.
“நீண்ட கால அடிப்படையில் இல்லாவிட்டாலும் இப்போதைக்கு அதைச் செய்யலாம்”.
மலாய், சீன மலேசியர்களின் கல்வித் தேவைகளை முறையே அரசும் வணிகர்களும் கவனித்துக் கொள்கிறார்கள்.ஆனால், இந்தியர்கள்தான் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
கல்வி விவகாரங்களில் மிகுந்த நாட்டம் கொண்டவர் தஸ்லிம்.1963-இல் இந்தோனேசிய எதிர்ப்பியக்கத்தின் விளைவாக அவரின் தந்தையின் உணவகத் தொழில் நொடித்துப்போனது.
“என் தந்தை(ஈப்போ) எண்டர்சன் பள்ளிக்கு நிறைய உதவி செய்தவர், குறிப்பாக அதன் விளையாட்டுத் துறைக்கு”, என்றவர் நினைவுகூர்ந்தார்.
பிழைப்பு நடத்துவது சிரமமாக இருந்ததால் அவரின் குடும்பம் 1966-இல் இந்தியா சென்றது.தஸ்லிம் மட்டும் இங்கேயே தங்கிக் கல்வியைத் தொடர்ந்தார்.
தங்குவதற்கு இடமில்லாததால் மாணவர் தங்குவிடுதி ஒன்றின் உதவியை நாடினார்.அங்கு அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.
“எனக்குத் தங்க இடமில்லை. மாணவர் விடுதியில் ஓர் அறையாவது கிடைக்குமா என்று கேட்டேன். ‘இல்லை, இந்த விடுதி மலாய்க்கார்களுக்கு மட்டுமே’ என்று பதில் வந்தது”.
16 வயதில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், “மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது.இப்போது காயம் ஆறிவிட்டது.ஆனால் வடு இன்னும் உள்ளது”, என்றார்.
“அதனால்தானோ என்னவோ,பிறகு தொழில் செய்து முன்னேற்றம் கண்டபோது பணமில்லை என்பதற்காக குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்காமல் போகக் கூடாது என்ற எண்ணம் மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது”