தொழில்திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இந்திய மாணவர்களுக்கு மிக அவசியமானதாகும். இக்கல்வி வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் சுயமாகத் தொழில் புரிய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது. ஆனால், இக்கல்வியைப் பெறுவதில் இந்திய மாணவர்கள் இமாலய அளவிலான தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று இன்று பின்னேரத்தில் தமிழ் அறவாரியம் மலேசியா மற்றும் கபூங்கான் பெர்டிண்டாக் மலேசியா (ஜிபிஎம்) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. [காணொளி]
தொழிற்திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்கு மிகக் குறைவான வாய்ப்பை பெறுபவர்கள் இந்திய மாணவர்கள் மட்டுமல்ல. அதே நிலையில்தான் சீன மாணவர்களும் இருக்கின்றனர் என்றும் விபரிக்கப்பட்டது.
இன்று (01/07/2012) தமிழ் அறவாரியம் மலேசியா அலுவலகத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில் ஜிபிஎம், அதன் தொழில்நுட்பம், தொழிற்திறன், கல்வி பயிற்சி குழு சார்பில் டான் சின் இம் தலைமையில் 9 பிரதிநிதிகளும், தமிழ் அறவாரியம் மலேசியா மற்றும் மைஸ்கில் அறவாரியம் ஆகியவற்றின் சார்பில் சி.பசுபதி தலைமையில் ஏழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களுடைய அன்றாட பள்ளி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு பாகுபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன. இவற்றால் மாணவர்களின் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலைகளில் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன? இன்னும் பலர் பல்கலைக்கழகம் வரையில் படிப்பை மேற்கொள்ள விரும்பவில்லை. அவர்களின் எதிர்காலம் என்னாவது? இன்னும் பலர் பொருளாதார வசதியற்றவர்களாக இருக்கின்றனர்.
இச்சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் பயிற்சி மூலம் தங்களுக்கு விருப்பமான தொழிலில் பயிற்சி பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடைமையாகும்.
ஆனால், இங்கும் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்திறன் பள்ளிகளில் இந்திய மற்றும் சீன மாணவர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் இடங்கள் மிக மிகக் குறைவானதாகும் என்பதை சில புள்ளிவிபரங்களுடன் அச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான பள்ளிகளில் சேரும் மாணவர்களில் பலர், குறிப்பாக இந்திய மாணவர்கள், பயிற்சியைத் தொடர்வதில்லை. ஏன்? அவர்களின் காலாடித்தனம் என்று அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. ஓரிருவர் அவ்வாறு இருக்கலாம். காலாடித்தனம் இல்லாத மாணவர் உலகம் என்று ஒன்று இல்லை. ஆனால், ஓர் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஒன்று அல்லது இரண்டு இந்திய மாணவர்கள், மூன்று அல்லது நான்கு சீன மாணவர்கள் எதிர்கொள்ளும் உணவுப் பிரச்னை, பண்பாட்டுப் பிரச்னை, தங்குமிடப் பிரச்னை, ஆசிரியர்களின் இனவாதப் போக்கு போன்றவை இம்மாணவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. இவற்றை ஏற்றுக்கொள்ள இயலாத மாணவர்கள் வெளியேறுகின்றனர். சில எடுத்துக்காட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
தொழிற்கல்வி பயிற்சி பெற வாய்ப்பு கிட்டாத மாணவர்கள், வாய்ப்பு கிட்டியும் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். இவர்களுக்கு முறையான வாய்ப்பும் வழியும் இல்லை என்றால் நாட்டில் எவரும் நிம்மதியாக வாழ முடியாது என்பது அச்சந்திப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
இப்பிரச்னையை இப்படியே விட்டுவிடக் கூடாது என்ற திடமான நோக்கத்துடன் இந்திய மாணவர்களுக்கு தொழிற்திறன் கல்வி வாய்ப்பு வழங்குவதற்கு மைஸ்கில் அறவாரியம் உருவாக்கப்பட்டதாக சி.பசுபதி தெரிவித்தார்.
மைஸ்கில் அறவாரியம் வழங்கும் பயிற்சி மற்றும் பயிற்சிக்குப் பின்னர் மாணவர்கள் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்து பசுபதி விளக்கம் அளித்தார்.
ஆனால், இது போதுமானதல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டதோடு இதர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொழிற்திறன் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் சீன மற்றும் இந்திய மாணவர்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று ஜிபிஎம் செயலக அதிகாரி யோக் லின் கூறினார். அதற்காக சீன, இந்திய சிவில் அமைப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மேலும் கூறினார்.
இவ்விவகாரம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில் தங்களுடைய குழந்தைகள் தொழிற்திறன், தொழில்நுட்ப பயிற்சி பெற வேண்டும் என்பதின் அவசியத்தை உணராத, ஈடுபாடு கொள்ளாத பெற்றோர்களுக்கு விழுப்புணர்ச்சி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யோக் லின் ஆலோசனை கூறினார்.
இந்நடவடிக்கை நாட்டிலுள்ள அனைத்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், முதல்கட்டமாக கடந்த மார்ச் மாதத்தில் பெற்றோர்களுடனான ஒரு சந்திப்பு ஒரு சீனப்பள்ளியில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும் கூறினார்.
மாணவர்களுக்கு தொழிற்திறன், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட வேண்டியது பற்றி பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் சந்திப்புகள் இனிமேல் கூட்டாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையை இன்றையச் சந்திப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இம்முடிவின் அடிப்படையில், தொழிற்திறன், தொழில்நுட்ப பயிற்சி குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அடுத்த கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 8-இல் கிள்ளானில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.