தேசிய எழுத்தாளர் சங்கமான கபேனா,நாட்டின் கல்விக் கொள்கையில் பல்வேறு மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்ற நெருக்குதலுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என்கிறது.
மாத இறுதியில், சீனமொழிக் கல்விக்காக போராடும் அமைப்பான தோங் ஜோங், நாட்டின் கல்விக்கொள்கையில் பன்மொழிகளைப் பயன்படுத்தக் கோரும் மகஜர் ஒன்றை வழங்க உத்தேசித்திருப்பதாகவும் அதன் நெருக்குதலுக்கு அரசாங்கம் பணிந்துபோகக்கூடாது என்றும் அது கூறிற்று.
பணிந்து போவது தேசிய மொழியான பகாசா மலேசியாவுக்குக் குழிபறிக்கும் செயலாகிவிடும்,அதைக்கொண்டு தேசிய ஒற்றுமையை மேலோங்கச் செய்வதும் வீணாகிவிடும் என்று கபேனா கூறியது.
“தேர்தல் நெருங்க நெருங்க தோங் ஜோங் உள்பட பலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைய வரும்.வாய்ப்பு கிடைத்தது என்று சாத்தியமற்றதையெல்லாம் கேட்கக்கூடாது”, என்று கபேனாவின் புதிய தலைவர் பேராசிரியர் அப்துல் லத்திப் அபு பக்கார் நேற்று எச்சரித்தார்.
அரசமைப்பின் 152வது பிரிவு மலாய்மொழிதான் தேசியமொழி என்று வலியுறுத்தி மற்ற மொழிகளும் கூடவே இருக்கலாம் என்று கூறுகிறது.இந்நிலையில் தோங் ஜோங் பன்மொழிக் கல்விக்கொள்கை தேவை என்று கோரிக்கை விடுப்பதை கபேனா கடுமையாக எதிர்க்கிறது என்று அப்துல் லத்திப் கூறினார்.
அக்கோரிக்கை அரசமைப்புக்கு முரணானது என்றவர் வலியுறுத்தினார்.
மாத இறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் 10-அம்ச மகஜர் ஒன்றை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய சீனப் பள்ளிகள் செயற்குழுக்களின் சங்கமான தோங் ஜோங் கடந்த வாரம் கூறியிருந்தது.
“நஜிப் பன்மொழிக் கல்விக்காகக் கொடுக்கப்படும் நெருக்குதலுக்குப் பணிந்துவிடக்கூடாது.அது மற்ற மொழிகளை பகாசா மலேசியாவுக்கு இணை வைப்பதாகிவிடும்.அதன் விளைவாக ஒற்றுமையும் தேசிய ஒருங்கிணைப்பும் பாதிப்புறும்”, என்று அப்துல் லத்திப் கூறினார்.
பகாசா மலேசியா விசயத்தில் விட்டுக்கொடுக்க முடியாது
தோங் ஜோங் மற்ற கோரிக்கைகளைத் தாராளமாக முன்வைக்கலாம் என்று கூறிய அப்துல் லத்திப், பன்மொழிக் கல்விக் கொள்கை மட்டும் வேண்டாம் என்றார்.
“சீனப் பள்ளிகளில் பகாசா மலேசியாவின் தரத்தை உயர்த்த தோங் ஜோங் விரும்புகிறதா அதனுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்”.
தோங் ஜோங் பன்மொழிக் கல்விக் கொள்கைக்குக் கோரிக்கை விடுக்குமானால், கபேனா அதை எதிர்க்கும் மகஜர் ஒன்றைத் தாக்கல் செய்யக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
“நாங்கள் தீவிரவாதிகளோ மொழிவெறியர்களோ அல்லர்.நாட்டுப்பற்றாளர்கள். பகாசா மலேசியாவுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்”, என்றாரவர்.