2005ம் ஆண்டு குயிஸ் எனப்படும் Kolej Universiti Islam Selangor-ருடன் செய்து கொண்ட ஒர் ‘அருமையான’ பேரத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஆதாயம் பெற்றதை பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அப்துல் ரசாக் மறுத்துள்ளார்.
“அது அவதூறானது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்துள்ள அந்தக் குற்றச்சாட்டை மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர்கினி என்ற சஞ்சிகை வெளியிட்டுள்ளது, என்னைப் புண்படுத்தியுள்ளது.: என சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் நேற்று அவர் கூறினார்.
குயிஸ் மாணவர்களுக்கான தங்கும் வசதிகளை நிர்மாணித்து இயக்கி மாற்றி விடும் குத்தகை வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு தாமும் தமது மனைவியும் சொந்தக்காரர்கள் என்பதை ஒப்புக் கொண்ட அவர் ஆதாயம் ராபிஸி சொல்வது போல அவ்வளவாக இல்லை என்றார்.
மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் துணை விநியோக மசோதா மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்த சுலைமான் தமது ஆதாயத்தை விழுங்கி விட்ட மற்ற செலவுகளை ராபிஸி மறந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
“அவர் எப்படிப்பட்ட கணக்காயர் என்பது எனக்குத் தெரியாது. மொத்த வருமானத்திலிருந்து கட்டுமானச் செலவுகளைக் கழித்து விட்டு அவர் கணக்குச் சொல்கிறார். மற்ற செலவுகள் ஏதும் இல்லை என அவர் எண்ணுவதாகத் தெரிகிறது.”
மொத்தம் 135,188,405.74 ரிங்கிட் மதிப்புள்ள அந்த திட்டத்துக்குத் தாம் 120 மில்லியன் ரிங்கிட் கடன் எடுத்ததாகவும் ஆனால் அதற்கு மேல் செலவு செய்து விட்டதாகவும் கூறி சுலைமான் ராபிஸியின் செலவுக் கணக்குகளை நிராகரித்தார்.
2005ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவோ, கட்சி அதிகாரியாகவோ இல்லாமல் சாதாரண அம்னோ உறுப்பினராக இருந்த வேளையில் தமது நிறுவனத்துக்கு அந்தக் குத்தகை கொடுக்கப்ப்பட்டதில் என்ன சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அவர் வினவினார்.
தமது நிறுவனம் கட்டிய தங்கும் விடுதி, மற்ற பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை விட குறைவாக இல்லாவிட்டாலும் சமமாக வாடகை செலுத்துவதாகவும் சுலைமான் கூறிக் கொண்டார்.
சிலாங்கூரில் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதற்கு சுலைமானுடைய ‘அருமையான’ பேரமும் ஒரு காரணம் என கடந்த மே மாதம் ராபிஸி குற்றம் சாட்டியிருந்தார்.
ராபிஸியின் குற்றச்சாட்டுக்களைல் மலேசியாகினி வெளியிட்டது. ஆனால் சுலைமானுடைய பெயரையும் அவரது நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. காரணம் அந்த விவகாரம் குறித்து சுலைமானுடைய கருத்துக்களைப் பெற முடியாமல் போனதாகும்.