டானாவ் புத்ராவில் உள்ள நான்கு துண்டு நிலத்துக்கு சிலாங்கூர் அரசாங்கம் இப்போது டிரினிட்டி கார்ப்பரேஷன் பெர்ஹாட் என அழைக்கப்படும் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கவில்லை.
உண்மையில் அந்தப் பரிவர்த்தனையில் மாநில அரசாங்கம் 5.8 மில்லியன் ரிங்கிட் கழிவு வழங்கியது என டிரினிட்டி கார்ப்பரேஷன் தலைவர் சென் கெங் யாம் கூறினார்.
பகுதி நீரில் மூழ்கியுள்ள அந்த நிலம் ஒரு சதுர அடிக்கு 15.98 ரிங்கிட் என்ற விகிதத்தில் மொத்தம் 93.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு சுயேச்சை மதிப்பீட்டாளர்கள் மதிப்பிடப்பட்டதாக சென் விடுத்த அறிக்கை கூறியது. அவர்கள் அந்த நிலத்துக்கு மண்ணைப் போட்டு நிரப்புவதற்கு ஏற்படக் கூடிய 51.5 மில்லியன் ரிங்கிட் செலவையும் அவர்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொண்டார்கள்.
அத்துடன் நீரில் மூழ்கியுள்ள பகுதி பற்றி மதிப்பீட்டு அறிக்கையில் மாநில அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பங்குப் பத்திர ஆணையத்தின் சொத்து மதிப்பீட்டுப் பிரிவும் புர்சா மலேசியா பங்குச் சந்தையும் ஆய்வு செய்து அனுமதி கொடுத்துள்ளன என்ரும் சென் குறிப்பிட்டார்.
இருந்தும் மொத்தம் 134.35 ஏக்கர் பரப்புள்ள அந்த நிலம் அதன் தொடக்க மதிப்பீட்டைக் காட்டிலும் குறைவாக அதாவது ஒரு சதுர அடிக்கு 15 ரிங்கிட் என்னும் விகிதத்தில் மொத்தம் 87.7 மில்லியன் ரிங்கிட்டுக்கு மாநில அரசுக்கு விற்கப்பட்டது.
அந்த நிலத்துக்கு சிலாங்கூர் கூடுதலாக 57.3 மில்லியன் ரிங்கிட் செலுத்தி விட்டதா என விவசாயத் துணை அமைச்சர் சுவா தீ யோங் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து தலாம் மீதான சர்ச்சை தொடங்கியது.
அந்த நான்கு துண்டு நிலங்களில் ஒன்று 80 விழுக்காடு நீருக்குள் மூழ்கியுள்ளதாகும். அது ஒரு சதுர அடிக்கு 5.20 ரிங்கிட் என்ற விகிதத்தில் 15 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் விடப்பட்டது எனக் கூறிய சுவா, அந்த விகிதத்தில் மொத்த நிலத்தின் விலையும் 30.4 மில்லியன் ரிங்கிட்டாக இருக்க வேண்டும் என்று வாதாடினார்.
சுவா, மசீச இளம் தொழில் நிபுணர்கள் பிரிவின் தலைவரும் ஆவார்.