சமூக ஊடகங்கள் பற்றிய சட்டங்கள் அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பான பல அம்சங்களையும் பிரச்னைகளையும் விவாதிக்க இந்த நாட்டில் சமூக ஊடக மன்றம் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய சமுதாயத்தில் சமூக ஊடகங்கள் இப்போது விரிவாகப் பரவி விட்டதுடன் ஒரு தேவையாகவும் மாறி விட்டன என அவர் சொன்னார்.
அந்த வகையில் சமூக ஊடகப் பயனாளிகளையும் உள்ளடக்கிய மன்றம் ஒன்று அமைக்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என அவர் கருதுகிறார். அதன் வழி சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விவாதிப்பதற்கான ஒர் அரங்கமாகவும் அந்த மன்றம் திகழ முடியும்.
“அந்த மன்றத்தில், பள்ளிக்கூடங்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்கப்படக் கூடிய கல்வி உட்பட நமது சமூகம், பாதுகாப்பு, சட்ட ரீதியிலான கடமைகள் மீதான பிரச்னைகளை விவாதிக்க முடியும்.”
அமைச்சர் நேற்று ஷா அலாமில் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆசிய தகவல், தொடர்பு மய்யத்தில் கொள்கை உரையாற்றிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
இந்த நாட்டில் பல்வேறு வயதுப் பிரிவுகளை சேர்ந்த 12 மில்லியன் மக்கள் முக நூல் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும் ராயிஸ் தெரிவித்தார்.