பிகேஆர் தலைவர் ஒருவருடைய புதல்வருக்குக் கொடுக்கப்பட்ட கடன் திடீரென மீட்டுக் கொள்ளப்பட்ட விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என மாரா உறுதி அளித்துள்ளது.
17 வயதான அக்மால் ஹாக்கிம் என்ற தமது புதல்வர் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு வழங்கிய கடனை மாரா ரத்துச் செய்து விட்டதாக பத்து பஹாட் பிகேஆர் தலைவர் சையட் ஹமீட் அலி கூறிக் கொண்டுள்ளதற்கு மாரா கல்வித் துணை இயக்குநர் அப்துல் ரஹிம் அப்துல் கனி பதில் அளித்தார்.
தாம் பிறந்த போது ‘அரபு’ எனப் பதிவு செய்யப்பட்டதே கடன் மீட்டுக் கொள்ளப்பட்டதற்கான காரணம் என சையட் ஹமிட் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.
மாரா வெகு விரைவில் அந்தப் பிரச்னையைத் தீர்க்கும். எல்லா நடவடிக்கைகளுக்கும் அடிப்படை இருக்க வேண்டும். நியாயப்படுத்தப்பட வேண்டும்,” என அப்துல் ரஹிம் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள மாரா தலைமையகத்தில் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
ஆனால் அந்த விவகாரம் எப்போது தீர்க்கப்படும் என்பதையோ கடன் மீட்டுக் கொள்ளப்பட்டதற்கான காரணங்களையோ தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
சையட் ஹமிட் பிறந்த போது “அரபு” என பதிவு செய்யப்பட்டதால் அவருடைய புதல்வரான 17 வயது அக்மால் ஹாக்கிமுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வழங்கப்பட்ட கடன் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
“எனக்கு வயது 69. அதாவது மெர்தேக்காவுக்கு முன்னர் நான் பிறந்தேன். எனது அண்டை வீட்டுக்காரர் என் பிறப்பைப் பதிவு செய்ய உதவினார். என் குடும்பப் பெயர் சையட் என வருவதால் நான் அரபு என அவர் எண்ணியிருக்க வேண்டும்.”
“என் புதல்வருடைய பிறப்பை நானே பதிவு செய்தேன். நான் அவருடைய பிறப்புப் பத்திரத்தில் தந்தை மலாய்க்காரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என அவர் சொன்னார்.
ரத்துச் செய்யும் கடிதம்
அமெரிக்காவில் உள்ள ஐவி லீக் பல்கலைக்கழகம் அல்லது அதற்குச் சமமான பல்கலைக்கழகம் ஒன்றில் வணிகக் கல்வி பயிலுவதற்கு அக்மால் ஹாக்கிமுக்கு அந்தக் கடனுதவி கொடுக்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள இண்டி அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் தொடக்க நிலைப் பயிற்சிக்காக ஜுன் 28ம் தேதி சேருமாறு தமது புதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தது என்றும் சையட் ஹமிட் சொன்னார்.
அவர் அந்த தொடக்கப் பயிற்சியில் சேருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக கல்விக் கடன் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறும் கடிதம் கூரியர் அஞ்சல் வழி அக்மால் ஹாக்கிமுக்குக் கிடைத்தது.
அந்த கடிதத்தின் ஒரு பகுதிய சையட் ஹமிட் தமது முகநூல் பக்கத்தில் சேர்த்துள்ளார். மாரா கல்விக் கடன்களை பெறுகின்றவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது ஒருவராவது மலாய்க்காரராக அல்லது பூமிபுத்ராவாகா இருப்பது கட்டாயம் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அக்மால் ஹாக்கிமின் தாயார் மலேசியச் சீனர் ஆவார்.
“ஆகவே நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யாததால் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் ரத்துச் செய்யப்படுகின்றது,” என அக்மால் ஹாக்கிமுக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் தெரிவித்தது.