Gerakan Selamatkan Felda (GSF) எனப்படும் இயக்கம் நாளை இஸ்தானா நெகாராவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மஸ்லான் அலிமான் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.
இரண்டு மணி நேர விவாதத்துக்கு பின்னர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியச் சாலையான ஜாலான் டூத்தாவுக்குப் பதில் பின்புறச் சாலையான ஜாலான் ஸ்ரீ ஹர்த்தாமாஸைப் பயன்படுத்துவதற்கு போலீஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அத்துடன் மகஜரைக் கொடுப்பதற்கு அந்த இயக்கத்தின் ஆறு பேராளர்கள் அரண்மனைக்குள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்லான் கெப்போங் போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஏழு பேராளர்கள் செந்தூல் மாவட்ட போலீஸ் அதிகாரி ஸாக்காரியா பாகான், பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் அதிகாரி வான் அப்துல் பேரி ஆகியோர் உட்பட போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்தனர்.
Felda Global Ventures Holdings Bhd (FGV)ஐ பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளதை எதிர்த்து அனாக் எனப்படும் Persatuan Anak Peneroka Felda என்னும் அமைப்பு அந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும். அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்தானா நெகாராவுக்கு ஊர்வலமாகச் செல்வார்கள்.