இனவாத கேலிச் சித்திரப் புத்தகத்தை தடை செய்க என அரசுக்கு வேண்டுகோள்

அரசாங்க நிகழ்வு ஒன்றில் விநியோகம் செய்யப்பட்ட கேலிச் சித்தரப் புத்தகம் ஒன்று ‘இனவாதத் தன்மையைக் கொண்டது, வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியது’ என அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று கண்டித்துள்ளது.

அதன் விநியோகம் நிறுத்தப்பட்டு அதன் வெளியீட்டாளருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான அனைத்துலக ஒப்பந்தத்தை தேசிய ரீதியில் அங்கீகரிப்பதற்கு போராடும் பணிக்குழு கேட்டுக் கொண்டது.

‘M1 Malaysia – Majalah Untuk Rakyat’ என்னும் தலைப்பைக் கொண்ட அந்தக் கேலிச் சித்திரப் புத்தகம் முதலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜுன் 24ம் தேதி தொடக்கி வைத்த Teksi Rakyat 1Malaysia (TR1MA) நிகழ்வில் விநியோகம் செய்யப்பட்டது.

அந்தக் கேலிச் சித்திரப் புத்தகத்தில் ‘1Malaysia vs 1Pati’ என்னும் பகுதி உள்ளது. அது பல இன சமுதாயத்தை ஒரு சிறுவன் பாராட்டுவதுடன் தொடங்குகிறது. ஆனால் பின்னர் அந்தச் சிறுவன் கறுப்பு நிற சருமத்தைக் கொண்ட  மக்களிடமிருந்து விலகி ஒடுகிறான்.

“ஹா.. இது ஒரே மலேசியா அல்ல. ஆனால் நாட்டை சீரழிக்க விரும்பும் 1Pati. திரு மரக்கரி-யிடமிருந்து ( (Awang Arang) விலகியிருங்கள்,” என அந்தக் கேலிச் சித்திர பாத்திரம் கூறுகின்றது.

‘Pati’ என்பது pendatang asing tanpa izin என்பதின் சுருக்கமாகும். அது மலாய் மொழியில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைக் குறிக்கிறது.

அந்த வெளியீடு குறித்து அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நில, பொதுப் போக்குவரத்து ஆணையத்துக்கும் உள்துறை அமைச்சின் வெளியீட்டுக் கட்டுப்பாடு, திருக்குரான் வாசகப் பிரிவுக்கு எதுவும் தெரியாது  என்றும் மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்து விளக்கமளிக்குமாறு நாங்கள் அதன் வெளியீட்டாளரைக் (Blue Pipe Studio Enterprise) கேட்டுக் கொள்வோம். அவசியமானல் அந்தப் புத்தகத்தைத் தடை செய்வோம்,” என அந்தப் பிரிவின் செயலாளர் அப்துல் அஜிஸ் முகமட் நோர் கூறினார்.

உள்துறை அமைச்சில் போதுமான அமலாக்க அதிகாரிகள் இல்லாததால் அந்த வெளியீட்டை கவனிக்க முடியாமல் போய் விட்டதாக அடையாளம் தெரிவிக்காத வட்டாரம் ஒன்று கூறியதாகவும் மலாய்  மெயில் குறிப்பிட்டது.

அந்தப் புத்தகம் கடைகளில் விற்கப்படாமல் அரசாங்க  நிகழ்வு ஒன்றில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரப் புத்தகம் ஒர் அவமானம்

அந்தப் பணிக்குழுவில் வழக்குரைஞர் மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவு, விடுதலைக்கான வழக்குரைஞர்கள், Saya Anak Bangsa Malaysia, இனவம்சாவளி ஆய்வுக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அந்தப் புத்தகம் ஒர் அவமானம் என்றும் பணிக்குழு வருணித்தது.

“அந்த புத்தகம் அந்நியர்களை சிறுமைப்படுத்துகின்றது. அவர்களைப் பற்றிய அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டி விடுகிறது. நமது நாட்டுக்கும் நமது பல பண்பாட்டு மக்கள் தொகைக்கும் அந்த புத்தகம் ஒர் அவமானமாகும்,” என அந்தக் குழு விடுத்த அறிக்கை தெரிவித்தது.

“இன, சமய வேறுபாடுகள் இருந்த போதிலும் மலேசியர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்றும் மாறுபட்ட தன்மையிலும் நாம் ஐக்கியத்தை சாதித்துள்ளோம் என்றும் கூறிக் கொள்வதற்கு  நேர்மாறாக அந்தப் புத்தகம் அமைந்துள்ளது.”

இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ள 175 நாடுகளில் மலேசியா இல்லை என்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. அரசாங்கம் அதனை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

“ஐநா-விலும் மனித உரிமைகள் மன்றத்திலும் உறுப்பினர் என்ற முறையில் மலேசியா நம் நாட்டில் உள்ள அனைத்து குடி மக்களையும் குடி மக்கள் அல்லாதாரையும் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளது.”

“மனித உரிமை நடைமுறைகளுக்கு ஆதரவளித்து அவற்றை அமலாக்குவதின் மூலம் மலேசியாவில் இனவாதத்தையும் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கு உண்மையிலேயே உறுதி பூண்டுள்ளது மலேசியா காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது,” என அந்தப் பணிக்குழு மேலும் வலியுறுத்தியது.