அந்நியச் சிறைச் சாலைகளில் 2,500 மலேசியர்கள்

இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் பலவகையான குற்றங்களுக்காக 2,500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் அந்நிய நாடுகளின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல், கொலை, கடன் பற்று அட்டை மோசடிகள், வர்த்தக் குற்றங்கள், திருட்டு, குடிநுழைவு விதிமுறைகள் மீறப்பட்டது, ஏமாற்றியது, ஆவணங்களைப் போலியாக தயாரித்தது, மனிதர்களை கடத்தியது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுக்களில் அடங்கும் என வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை இன்று மேலவையில் கூறினார்.

மலேசியக் கைதிகள் உள்ள நாடுகளில் சிங்கப்பூர் (1,096), தாய்லாந்து (444), சீனா (231), இந்தோனிசியா(148), தைவான்(137), ஆஸ்திரேலியா (77), ஸ்பெயின்(47), குவாய்த் (33), வியட்னாம்(29) பிரான்ஸ்(25),”என அவர் செனட்டர் இன் சூ பின் தொடுத்த கேள்விக்குப் பதில் அளித்த போது கூறினார்.

அந்நியச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்கள் குறித்து அரசாங்கம் கவலை கொள்வதாகவும் ஆனால் அது மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது என்றும் கோகிலன் தெரிவித்தார்.

“1963ம் ஆண்டுக்கான தூதரக உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தம் போன்ற அனைத்துலக சட்டங்கள், நமது சொந்தச் சட்டங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது குடி மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது,” என்றார் அவர்.

1995ம் ஆண்டுக்கான சிறைச்சாலைச் சட்டம், ஈராயிரத்தாவது ஆண்டுக்கான சிறைச்சாலை விதிமுறைகள் ஆகியவற்றின் கீழ் வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள மலேசியக் கைதிகளை நாட்டுக்குள் கொண்டு வந்து சிறைத் தண்டனை காலத்தை இங்கு அனுபவிப்பதற்கான நடைமுறை ஏற்பாடு ஒன்றையும் அரசாங்கம் தயாரிப்பதாகவும் சின் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதில் அளித்த கோகிலன் சொன்னார்.

“இந்த நாட்டுக்குள் மலேசியக் கைதிகளை திரும்ப கொண்டு வருவதற்கு அனுமதிக்கும் அனைத்துலகச் சட்டத்தை வரைவதற்கு வெளியுறவு அமைச்சு, மகளிர், சமூக, குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு, சிறைச்சாலைத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஒரு குழுவை உள்துறை அமைச்சு அமைத்துள்ளது,” என்றார் அவர்.

பெர்னாமா