ஆர்டிஎம் எனப்படும் மலேசிய வானொலி தொலைக்காட்சி வழியாக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்புவதற்கு அனுமதிப்பது தொடர்பான வழிமுறைகளையும் நிபந்தனைகளையும் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு பரிசீலித்து வருகின்றது.
அந்தத் தகவலை இன்று தேவான் நெகாராவில் அதன் துணை அமைச்சர் ஜோசப் சாலாங் வெளியிட்டார்.
வழிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இறுதி வடிவம் கொடுப்பதற்கு அமைச்சு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் சொன்னார்.
“பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது கொள்கை அறிக்கைகளின் உள்ளடக்கத்தையும் நோக்கங்களையும் விளக்குவதற்கு அது உதவும்,” என செனட்ட சைபுல் இஸ்ஹாம் ராம்லியின் கேள்விக்கு பதில் அளித்த ஜோசப் சாலாங் கூறினார்.
அந்த வழிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு இணங்கவும் ஆர்டிஎம்-மின் ஒலிபரப்பு நேரங்கள், நிகழ்ச்சி அட்டவணைகள் ஆகியவற்றுக்கு இணங்கவும் தேர்தல் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்புச் செய்வதற்கு ஆர்டிஎம் வகை செய்யும் என்றும் அவர் சொன்னார்.