சபா முதலமைச்சர் மூசா அமானுக்கு எதிராக தாம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் நிராகரித்துள்ளது தவறான முடிவு என ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ஜிம்மி வோங் வருணித்துள்ளார்.
சபாநாயகர் தமது முடிவுக்கு எந்தக் காரணத்தையும் வழங்கவில்லை என நேற்று அவர் விடுத்த அறிக்கைகுறிப்பிட்டது.
“அது ஜனநாயக உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டது. மக்களுக்கு அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது,” என வோங் சொன்னார்.
கள்ளப்பணத்தை வெள்ளையாக்கும் ஊழலில் மூசா சம்பந்தப்பட்டுள்ளதாக ஹாங்காங்கில் வெளியான தகவல்கள் அடிப்படையில் வோங் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்பித்திருந்தார்.
வெட்டுமர கையூட்டுக்கள் வழி கிடைத்ததாக கூறப்படும் 90 மில்லியன் அமெரிக்க டாலரை (276 மில்லியன் ரிங்கிட்) ஹாங்காங்கில் உள்ள ஸ்விஸ் யூபிஎஸ் வங்கிக் கணக்கு வழியாகவும் ஸ்விட்சர்லாந்து வழியாகவும் வெள்ளைப் பணமாக்குவதற்கு மூசா முயன்றதாகச் சொல்லப்படுவது மீது ஹாங்காங் ஊழல் தடுப்பு சுயேச்சை ஆணையம் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சகாக்களுடன் ஒத்துழைக்க மலேசிய அதிகாரிகள் மறுத்து விட்டதற்கான ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக லண்டனைத் தளமாகக் கொண்ட, தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட் என்ற இணையத் தளம் கூறிக் கொண்டுள்ளது.
மூசாவுக்கு உறவினர் எனக் கூறப்படும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் மூசாவை மலேசிய அதிகாரிகள் விசாரிப்பதற்கு முட்டுக் கட்டை போட்டு விட்டதாகவும் அந்த இணையத் தளம் குற்றம் சாட்டியுள்ளது.
சபா மாநிலச் சட்டமன்றம் தனது மூன்று நாள் கூட்டத்தை நேற்று தொடங்கியது.