சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

சைம் டார்பி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் ஜுபிர் முர்ஷிட் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.

சைம் டார்பி நிறுவனத்துக்கு அந்த மோசடிகளினால் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் சைம் டார்பி பயன்பாட்டுக்காகக் குறிக்கப்பட்டிருந்த நிலத்தை இரண்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதை தடுக்கத் தவறி விட்டதாகவும் அதனால் சைம் டார்பி பின்னர் அந்த நிலத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக அந்த நிறுவனங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என குற்றவியல் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் அந்த முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சைம் டார்பி தனது சரவாக் மேல் நிலை விரிவுத் திட்டத்தின் கீழ் அந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்த போதிலும் அந்த நிலம்  Vertical Drive Sdn Bhd, Natural Ambience Sdn Bhd ஆகியவற்றுக்கு பின்னர் கொடுக்கப்பட்டதை அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதனை நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவோ 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜுபிர் தவறி விட்டதாக அரசு தரப்பு கூறுகிறது.

பின்னர் அந்த நிலத்தின் கட்டுப்பாட்டை பெறுவதற்காக Vertical Drive, Natural Ambience ஆகியவற்றை

எடுத்துக் கொள்வதற்கு முறையே 85 மில்லியன் ரிங்கிட்டையும் 16 மில்லியன் ரிங்கிட்டையும் சைம் டார்பி கொடுக்க வேண்டியிருந்தது.

நீதிபதி ஜக்ஜித் சிங், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 100,000 ரிங்கிட் ஜாமீனை ஜுபிருக்கு அனுமதித்தார்.

அந்த வழக்கு, வழக்கு நிர்வாகத்துக்காக அக்டோபர் 2ம் தேதி மீண்டும் சமர்பிக்கப்படும்.