பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தான் ஆட்சிக்கு வந்தால் அமலாக்கப் போவதாக பினாங்கு பாரிசான் நேசனல் இன்னொரு வாக்குறுதியை பினாங்கு மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த முறை ‘வாடகை-கொள்முதல்’ கோட்பாட்டின் மூலம் 350,000 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக பிஎன் உறுதி கூறியுள்ளது.
இவ்வாண்டு பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டும் நிகழும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிஎன் கொள்கை அறிக்கையில் அந்த வாக்குறுதி இடம் பெறும் என பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு பக்காத்தானிடம் தான் இழந்த மாநில ஆட்சியை பிஎன் கைப்பற்றுமானால் அந்தக் கோட்பாடு அமலாக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
பினாங்குத் தீவில் மக்களுடைய வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையில் வீடுகளை கட்டிக் கொடுக்கத் தவறியுள்ளதைத் தொடர்ந்து அந்த யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாக கெரக்கான் தலைமைச் செயலாளருமான தெங் கூறினார்.
பினாங்கு அரசாங்கம் தனது மேம்பாட்டு நிறுவனமான பினாங்கு மேம்பாட்டுக் கழகம் வழி தலை நிலத்தில் குறிப்பாக பத்து காவானில் வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையில் வீடுகளைக் கட்டுவதை பிஎன் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“பினாங்கு தீவில் வேலை செய்வதற்கு மக்கள் அன்றாடம் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்ய முடியும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? போக்குவரத்து, திட்ட அடிப்படையில் அது பொருத்தமற்றதாகும்.”
“ஆகவே நாங்கள் ‘வாடகை-கொள்முதல்’ கோட்பாட்டை அறிமுகம் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் கீழ் நீங்கள் முதலில் வாடகை செலுத்துகின்றீர்கள். பின்னர் அது முன்பணமாக மாற்றப்பட்டு வீட்டை வாங்குவதற்கு உங்களுக்குக் கடன் கிடைப்பதற்கு வகை செய்யப்படும்,” என்றார் அவர்.
மாநில அரசாங்கம் பத்து காவானில் 11,000 வீடுகளைக் கட்டப் போவதாக முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ள போதிலும் மக்களுடைய வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையில் வீடுகளை வழங்கவில்லை என அவர் மீது கடுமையாகக் குறை கூறப்பட்டு வருகின்றது.