மசீச சீனர்களுடைய உணர்வுகளைப் ‘புரிந்து கொள்ளவில்லை’ என வெளிப்படையாக குற்றம் சாட்டியதின் வழி துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மசீச தலைவர்களை உசுப்பி விட்டுள்ளதாக தோன்றுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து அம்னோ தொகுதி ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த முஹைடின், பிஎன் உறுப்புக் கட்சிகள்- குறிப்பாக மசீச-வையும் மஇகா-வையும் பெயர் குறிப்பிட்டு- சீனர், இந்தியர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
பிஎன் எந்த இடத்திலும் வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் தலைவர்கள் முதலில் எல்லா இனங்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அம்னோ தொகுதிக்கு தாம் செல்லும் போது அந்தப் பகுதியில் மக்களிடையே காணப்படும் உணர்வுகள் பற்றித் தமக்கு விளக்கமளிக்கப்படும். ஆனால் மற்ற உறுப்புக்கட்சிகளுக்கு அது பிரச்னையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மசீச-வைக் குறிப்பாக சுட்டிக் காட்டிய அவர், சீனர் உணர்வுகளை அந்தக் கட்சி ஏன் “அறிந்து கொள்ள முடியாமல்” இருப்பது தமக்குப் புரியவில்லை என்றார்.
“உண்மையில் சீனர்கள் மிகவும் சிக்கலானவர்களா ? அவர்களுடைய போக்கைப் புரிந்து கொள்ள முடியாதா ?” என்றும் முஹைடின் வினவினார்.
பிஎன் அணுகும் போது சீன சமூகத்தினர் திறந்த மனதுடன் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது இல்லை. ஆனால் மூன்றாவது தரப்பு வழியாக அதனைச் செய்கின்றனர் என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
தமது பாகோ தொகுதியை ஒர் எடுத்துக்காட்டாக காட்டிய அவர், அங்குள்ள எல்லா 1,744 இந்திய வாக்காளர்களும் எதிர்நோக்கிய பிரச்னைகளை தமது அம்னோ தொகுதியும் அதன் மஇகா சகாவும் ஒரு மாதத்திற்குள் தீர்த்து விட்டதாக சொன்னார்.
மசீச-வும் மஇகா-வும் அதனைப் பின்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘துணைப் பிரதமர் மலாய் அடிப்படை சிந்தனையை மிக அதிகமாக கொண்டுள்ளார்’
அதற்கு உடனடியாகப் பதில் அளித்த மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய், முஹைடின் மலேசியர்களை முழுமையாக புரிந்து கொள்ளத் தவறி விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
“மக்களுடைய குரலை மசீச-வும் மஇகா-வும் புரிந்து கொள்ளவில்லை என அவர் சொல்கிறார். என்னுடைய கருத்துப்படி, துணைப் பிரதமர் எல்லா மலேசியர்களுடைய குரலையும் புரிந்து கொள்ள வேண்டும். மலாய்க்காரர்களுக்கு மட்டும் செவி சாய்க்கக் கூடாது,” என்றார அவர்.
சீனர்கள் நியாயமான கொள்கைகளை விரும்புகின்றனர். இரண்டு வகையான தரங்களைக் கொண்ட கொள்கைகளை அல்ல என்றும் லியாவ் சொன்னார்.
“அவர் மலாய்க்காரர்களுடைய தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக அனைத்து மலேசியர்களுடைய தேவைகளையும் கவனிக்க வேண்டும். அவர் அதனைப் புரிந்து கொண்டிருந்தால் அவர் அந்தக் கருத்துக்களை சொல்லியிருக்க மாட்டார்,” என லியாவ் சொன்னதாக ஒரியண்டல் டெய்லி நாளேடு குறிப்பிட்டது.
சீன சமூக உணர்வுகளை மசீச மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளது என்றும் அமைச்சரவையிலும் மற்ற வழிகளிலும் அந்தப் பிரச்னைகளை மசீச எழுப்பி வரும் என்றும் லியாவ் தெரிவித்தார் என சின் சியூ கூறியது.
“சீன சமூகத்திற்கு நியாயமாக இல்லாத கொள்கைகள் மெதுவாக சரி செய்யப்படுகின்றன. இன்னும் தீர்க்கப்படாத மற்ற விஷயங்கள் விரைவாக தீர்க்கப்படும். கொள்கைகள் திறந்த போக்கைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம்,” என்றார் அவர்.