லத்தீபா ராஜினாமாவை சிலாங்கூர் ஆட்சி மன்றம் விவாதிக்கும்

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா விலகிக் கொண்டிருப்பதை சிலாங்கூர் மாநில ஆட்சி மன்றம் நாளைய கூட்டத்தில் விவாதிக்கும்.

அந்தத் தகவலை மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வெளியிட்டார்.

“எனக்கு அவரது ( பதவித் துறப்பு) கடிதம் கிடைக்கவில்லை. என்றாலும் என்னிடம் அந்தக் கடிதம் இருந்தாலும் நாளைய ஆட்சி மன்றக் கூட்டத்தில் மட்டுமே நான் அதனை விவாதிப்பேன்,” என காலித் இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

லத்தீபாவின் ராஜினாமாவை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என வினவப்பட்ட போது, தேர்வு அவரை, அதுவும் அவரை மட்டுமே பொறுத்துள்ளது என அவர் பதில் அளித்தார்.

“அது லத்தீபா கோயா-வை சார்ந்தது. மாநில அரசாங்கத்தை அல்ல.”

மாநில அரசாங்கம் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்குத் திட்டமிடுகிறது என  வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து லத்தீபா நேற்று தமது பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பித்தார்.

‘காலித் தீர்மானத்தை முன்மொழிந்தார்’

அந்த ஊகங்கள் பரவியிருப்பதைத் தொடர்ந்து தாம் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பது ‘பொருத்தமாக இருக்காது’ என லத்தீபா தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரை நீக்குவதற்கான யோசனையை காலித்-தே முன்மொழிந்தார் என கடந்த வாரம் பல வட்டாரங்கள் குறிப்பிட்டதாக பிரி மலேசியா செய்தி இணையத் தளம் தகவல் வெளியிட்டது.