காபேனா: பாஹாசா மலேசியா பிரச்னைகளுக்கு தலைவர்களுடைய “முட்டாள்தனமே” காரணம்

பாஹாசா மலேசியாவின் நிலையை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் அளவுக்கு அரசாங்க நிகழ்வுகளில் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை தேசியத் தலைவர்கள் ஆதரிப்பதாக காபேனா எனப்படும் தேசிய எழுத்தாளர் சங்கம் ( Gabungan Persatuan Penulis Nasional Malaysia )கூறுகிறது. தேசிய மொழியின் இன்றைய நிலைக்கு அவர்களே காரணம் என அது பழி போட்டது.

பாரம்பரிய மலாய் உடைகளை அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பும் தலைவர்களும் இருப்பதாக 21 எழுத்தாளர் சங்கங்களின் கூட்டமைப்பான காபேனா தெரிவித்தது.

“அந்தத் தலைவர்கள் அந்நிய மொழி மகத்தானது என எண்ணுகின்றனர். தேசிய மொழி அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரளவு முட்டாள்கள்,” எனக் கூறிய காபேனா தலைவர் அப்துல் லத்தீப் அபு பாக்கார் அந்த மக்களை ‘மொழி முட்டாள்கள்’ என வருணித்தார்.

“எடுத்துக்காட்டுக்கு அரசாங்கக் கூட்டங்கள் பாஹாசா மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அடிக்கடி உத்தரவிடுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் தங்கள் கூட்டங்களை  நடத்துகின்றவர்களும் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது,” என மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

அந்தத் தலைவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்பிய அப்துல் லத்தீப், நாட்டின் தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி அறிக்கைகளில் காண முடிகிறது என்றார்.

“நிருபர்கள் பாஹாசா மலேசியாவில் கேள்விகளை கேட்கின்றனர். ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்கின்றனர். அவர்களுடைய ஆங்கில மொழி இலக்கணம் கூடத் தவறாக உள்ளது.”

அத்தகைய மக்களை கேலி செய்யும் வகையில் “மொழி முட்டாள்கள்” என்னும் தலைப்பில் காபேனா சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதாகவும் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சிகளுக்கான வசனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதனை ஆர்டிஎம் ஒளிபரப்பும்.

பொதுத் துறையில் பாஹாசா மலேசியா பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க தேசிய மொழி கண்காணிப்பு நடவடிக்கை மன்றத்தை அமைத்துள்ளதற்கு அத்தகைய போக்கே காரணம் என அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த எட்டாவது தேசிய மொழிப் பேரவையில் அந்த மன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு அமலாக்க அதிகாரம் இல்லை என்றாலும் தேசிய மொழியின் எல்லா அம்சங்களையும் பல்வேறு தரப்புக்களுக்கு நினைவூட்ட அந்த மன்றம் எண்ணியுள்ளது.

“நாங்கள் வலுக்கட்டாயமாக மொழியைத் திணிக்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு நினைவூட்ட முடியும்,” என்றார் அப்துல் லத்தீப்.

“மொழி முட்டாள்களான தலைவர்கள் மாற வேண்டும். அவர்கள் திருந்த வேண்டும். இது நமது நாடு. நமது மொழி. மலாய் மொழியை ஐக்கியத்துக்கான மொழியாகப் பயன்படுத்துங்கள்,” என்றார் அவர்.