அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் தொடர்பான ஒரு பில்லியன் ரிங்கிட் டெண்டர் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஜார்ஜ் கெண்ட் சென் பெர்ஹாட் கூறுகிறது.
அந்த நிறுவனத்துக்கு அந்தக் குத்தகை கிடைப்பதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதன் சார்பில் தலையிட்டார் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் அதன் பூச்சோங் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற பின்னர் அதன் தலைவர் தான் கோ ஹாக் நிருபர்களிடம் பேசினார்.
“இல்லை இல்லை.. இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே நாம் அதற்காக காத்திருப்போம். அரசாங்கம் அதனைக் கொடுப்பதற்காக காத்திருப்போம். அது எங்களுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம்,” என்றார் அவர்.
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் அந்தக் குற்றச்சாட்டுக்களை எழுப்பிய பின்னர் அந்த விவகாரம் அரசியல் மயமாகி விட்டதால் குத்தகை ஜார்ஜ் கெண்ட்-டுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் வாய்ப்புக்கள் எப்படி உள்ளன என்றும் அவரிடம் வினவப்பட்டது.
“என்ன அரசியல் இழுபறி ? நாங்கள் வர்த்தக அமைப்பு. அரசியல் பற்றிப் பேச வேண்டாம். நான் அரசியல்வாதி அல்ல,” என்றார் தான்.
“நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. காத்திருங்கள். அந்தத் திட்டத்தை அரசாங்கம் வழங்கியதும் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம்,” என அவர் சொன்னார்.
போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ஜார்ஜ் கெண்ட்-டுக்கு போதுமான அனுபவம் இல்லாத போதும் அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்தை அதற்கு வழங்க பிரதமர் தலையிட்டதைத் தொடர்ந்து நிதி அமைச்சு அங்கீகாரம் அளித்ததாக ராபிஸி பல செய்தியாளர்கள் சந்திப்புக்களில் கூறிக் கொண்டார்.