தடுப்புக் காவல் மரண வழக்கில் திறந்த தீர்ப்பை நீதிமன்றம் நிலை நிறுத்தியது

2009ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த 31 வயது ஆர் குணசேகரனுடைய இறப்பு மீது மரண விசாரணையில் வழங்கப்பட்ட திறந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.

என்றாலும் எதிர்காலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் போது நிகழும் மரணங்கள் பற்றிய விசாரணைகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவை மற்ற மாவட்ட போலீசாரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குணசேகரன் ஒரு மணி நேரத்தில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் மர்மமான சூழ்நிலைகளில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். போலீஸ் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

திறந்த தீர்ப்பை நிலை நிறுத்திய நீதித் துறை ஆணையாளர் கமார்டின் ஹஷிம், பாதிக்கப்பட்டவர் மீது போலீஸ் லான்ஸ் கார்ப்பரல் முகமட் பைசால் மாட் தாஹிர் மேற்கொண்ட தாக்குதலைக் குறிப்பிட்டார்.

“அதே வேளையில் பாதிக்கப்பட்டவர் chloroquine என்னும் போதைப் பொருளை அதிகமாக உட்கொண்டிருக்கக் கூடிய சாத்தியத்தையும் நீதிமன்றம் நிராகரிக்க முடியாது,” என நீதிபதி சொன்னார்.

“ஆகவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குரோனர் வழங்கிய திறந்த தீர்ப்பை நீதிமன்றம் நிலை நிறுத்துகிறது.”

“எதிர்காலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் போது நிகழும் மரணங்கள் பற்றிய விசாரணைகள் அதே போலீஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்படாமல் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.”

இது வெளிப்படையான போக்கை உறுதி செய்யும்,” என்றார் அவர்.